ராம் கோவில் மற்றும் பாப்ரி மஸ்ஜித் தொடர்பான விசாரணைகள் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் முடிவடையும் என்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.
அத்வானி தலைமையிலான ராம ஜன்மபூமி விவகாரம் அரசியலாக்கப்பட்டு, நாடு முழுவதும் இந்து அடையாளத்தை ஏற்படுத்த ரத யாத்திரை, கர சேவா ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டன. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அயோத்தியாவில் லட்சக்கணக்கானோர் ஒன்று கூடி கடந்த 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கினர்.

இது மிக பெரிய சர்ச்சையை எற்படுத்தி, பல அதிர்வுகளை சந்தித்தது. இதனை தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ராமர் கோவில் தொடர்பான விசாரணையை நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்து மகா சபா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், “இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் ராமர் கோவில் வழக்கு முடிந்து விடும். இதுவரையிலும் விசாரித்தது போதுமானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இவ்வழக்கு தொடர்பான கடைசி விசாரனை இன்று நடைபெறும் என தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார். அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சுன்னி வக்ஃப் வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகியவற்றுக்கு சமமாக பகிர்ந்துக்கொள்ள கடந்த 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு தான் இன்றுடன் முடிவடைகிறது. அதே போல் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நவம்பர் மாதம் 4 அல்லது 5ஆம் தேதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.