
இலங்கை யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விமான சேவை இன்று தொடங்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை தொடங்கப்பட்டது.
டிசம்பர் 10ம் தேதி 1947ம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனால் அந்நாட்டில் 1983ம் ஆண்டில் நடந்த உள்நாட்டு போர் காரணமாக யாழ்பாண சர்வதேச விமான நிலையம் முற்றிலும் ராணுவ பயன்பாட்டிற்கு பயன்பட்டதால் விமான சேவை நிறுத்தப்பட்டது. இது 225 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. இந்திய அரசு விமான நிலையத்தை புதுப்பிக்க 30 கோடி ரூபாய் நிதியுதவி செய்தது. அது முடிவடைந்து விட்டதால் தற்போது மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8.55 மணிக்கு சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்ட ஏர் இந்தியாவின் விமானம், 35 நிமிடத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது. இந்த விமானத்தில் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. விமான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட 16 பேர் மட்டுமே விமானத்தில் பயணம் செய்தனர். முதல்கட்டமாக, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, மும்பை, திருவனந்தபுரம் நகரங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் இயக்கப்பட உள்ளது.