மோடி அரசாங்கத்தின் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் திறன், கும்பல் கொலைகளுக்கு எதிரான நடவடிக்கை இல்லாதது குறித்து பஜாஜ் குழுமத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் சனிக்கிழமை கவலை தெரிவித்தார்.
எகனாமிக்ஸ் டைம்ஸ் நிறுவனம் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று மும்பையில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில், கலந்துக்கொண்ட பஜாஜ் குழுமத்தின் தலைவரான ராகுல் பஜாஜ், “கார்ப்பரேட் தொழிலில் ஈடுபடும் நண்பர்கள் யாரும் பேச தயங்குகின்றனர். ஆனால் நான் சில விசயங்களை தெளிவாக பேச விரும்புகிறேன்” என்றார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் ஆட்சியில் எங்களால் பேச முடிந்தது. அந்த அளவிற்கு கருத்து சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவற்றை எல்லாம் தற்போது இழந்திருக்கிறோம். உங்கள் அரசாங்கத்தை விமர்சிக்க எங்களுக்கு பயமாக இருக்கிறது. காந்தியை சுட்டு கொன்றது யார் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரை ஒருவர் தேச பக்தர் என்று சொல்கிறார். அவருக்கு நீங்கள் தேர்தலில் போட்டியிட அனுமதி தந்தீர்கள். அவரும் வென்று நாடாளுமன்றம் வந்தார், பாதுகாப்பு குழுவில் சேர்த்து கொண்டீர்கள்.
அதுமட்டுமின்றி, தற்போது அதிகரித்து வரும் கும்பல் வன்முறை அதிகரித்து வரும் சூழலில், இது தொடர்பாக யாரும் தண்டிக்கப்படவில்லை என்பதே எங்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது” என அவர் தெரிவித்தார்.
ராகுல் பஜாஜின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த, மத்திய அமைச்சர் அமித் ஷா, “யாரும் பயம் கொள்ள தேவை இல்லை. கேள்வி கேட்கும் சூழலை மேம்படுத்த அனைத்து முயற்சிகளையும் எதுக்க வேண்டும்” என தெரிவித்தார்.