கும்பல் வன்முறை குறித்து பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்திற்கு காங்கிரஸ் எம்.பி சசி தரூர் விமர்ச்சித்துள்ளார்.
விஜயதசமி விழாவை முன்னிட்டு நாக்பூரில் நடைபெற்ற விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “கும்பல் வன்முறை (lynching) என்ற வார்த்தை இந்திய பண்பாட்டில் கிடையாது. அது மேற்கிந்திய மத நூல்களில் காணப்படும் வார்த்தை. ஒரு கட்டுமானத்தை இந்தியாவில் கொண்டுள்ளது. வேறு ஒரு மதத்தின் கோட்பாட்டில் உள்ள வரிகளை நம் மீது சுமத்துகிறார்கள். இந்தியாவின் பண்டைய வரலாற்றிலும், கலாச்சாரத்திலும் இப்படி ஒரு வார்த்தையே கிடையாது” என கூறியிருந்தார்.
இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோகன் பகவத்தின் கருத்து குறித்து பேசிய காங்கிரஸ் முத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதியில் எம்.பியுமான சசி தரூர் செய்தியாளர்கள் சந்திப்பில் “கும்பல் வன்முறை (lynching) என்ற வார்த்தை மேற்கில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் அதற்கு தகுந்த சமஸ்கிருத வார்த்தையை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படியும் அவர்கள் செய்வது குற்றம் தான். குற்றம் எவ்வாறு இருப்பினும் குற்றம் தான்” என கட்டம் தெரிவித்துள்ளார்.

இதே போல, ஹைதராபாத் எம்.பியும், ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவருமான அசதுத்தீன் ஒவைசியும் மோகன் பகவத்தை விமர்ச்சித்துள்ளார். “கும்பல் வன்முறையில் கொலை செய்யப்பட்டவர் ஒரு இந்தியர். ஆனால் கொலை செய்தவரை தேசத்தின் காப்பாளராக கொண்டாடுபவர்கள் யார்? காந்தியை கொன்ற கோட்ஸேவை விரும்புகின்ற பாஜக எம்.பியை நாம் கொண்டிருக்கிறோம். காந்தி மற்றும் தப்ரேஸ் போன்றவர்களை கொன்ற சித்தாந்தத்தை விட இந்தியாவுக்கு ஒரு பெரிய அவதூறு வேறு ஏதுமில்லை. ஆனால் தற்போதும் கூட மோகன் பகவத் கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை. ஆங்கில பேரை பயன்படுத்த வேண்டும் என்று தான் கூறுகிறார்” என மோகன் பகவதை தாக்கி பேசியுள்ளார்.