அரசியல் அரங்கில் தவிர்க்க முடியாத பேராற்றலைக் கொண்டவர். 1967 முதல் தமிழக அரசியலின் உந்துசக்தியாய் திகழ்பவர். மக்களால் பேரறிஞர் அண்ணா என்றும் அழைக்கப்படும் அந்த தலைவன் தான் சி.என்.அண்ணாதுரை.
1949ஆம் ஆண்டு தந்தை பெரியாருடன் ஏற்பட்ட மோதலால் திராவிடர் கழகத்திலிருந்து விலகி தி.மு கழகத்தைத் தொடங்கிய அவர், அன்றைய காலத்தில் பெரிய கட்சியாக வலம்வந்த இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி 1967ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தார். அதன் பிறகு சிறிது காலமே உயிரோடு இருந்த அவரை
சாதி, மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், தமிழக மக்களால் இன்றளவும் கதாநாயகராக கொண்டாடப்படும் மாபெரும் மனிதராக திகழ்கிறார்.
மறைந்த கவிஞர் கருணானந்தன் மன்னார்குடியில் நடைபெற்ற தனது சுயமரியாதை திருமணத்தைத் தலைமை தாங்க பெரியாரை அணுகினார். ஆனால் பெரியாரோ வேறு வேளைகளில் ஈடுபட்டிருந்தமையால் அண்ணாவை அனுப்பி வைத்தார். அண்ணாவும் மன்னார்க்குடி செல்ல, கருணானந்தன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை விளக்கிக் கூறினார்.
காலை 9 மணிக்கு வருவதாகச் சொல்லிச் சென்ற அண்ணா, தனிப்பட்ட முறையில் திருமணம் குறித்து சகாக்களின் மூலமாக சில விபரங்களைப் பெற்றுக்கொண்டார். அதாவது, மணமகளின் தந்தை பழைய மரபை மதிக்கக்கூடியவர். ஆனாலும் கவிஞர் கருணானந்தனோ சுயமரியாதை திருமண முறையில் ஆர்வமாக இருந்தமையால், சிறிது மனவருத்தத்துடன் ஒப்புக் கொண்டாராம். ஆடம்பரமாகத் திருமணத்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மணமகளின் தந்தையின் உணர்வுகளைப் புண்படுத்த அண்ணாவிற்கு உடன்பாடு இல்லை. ஆகவே அருகிலுள்ள ஊரில் தனக்கு வேறு சில நிச்சயதார்த்த நிகழ்ச்சிகள் இருப்பதாகவும், நண்பகல் 12 மணிக்கு வருவதாகவும், திருமணம் நடக்கும்படி நடக்கட்டும் என்று செய்தியைச் சொல்லி அனுப்பிய அண்ணா, சொன்னபடியே சரியாக மதிய பொழுதில், திருமணம் நடைபெற்ற இடத்திற்கு வந்தார்.
இவ்வாறு, சக மனிதனின் நம்பிக்கையைப் புண்படுத்த விரும்பாத தன்மையும், அவர்களின் உணர்வுகள் மீது அண்ணா கொண்டிருந்த மரியாதையையும் நினைவுபடுத்த இந்த சம்பவம் முக்கியமானதாகும்.
அண்ணா தலைமையிலான திமுக, ஆட்சியில் அமர்ந்த 2 ஆண்டுக் காலத்தில் மரணத்தின் பிடியில் சிக்கிய அவர், மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை “தமிழ்நாடு” என்று மாற்றியமைத்தார். சுயமரியாதை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கினார். ஒரு மாநிலத்தின் மொழியை பாதுகாக்கும் வகையில் நாட்டிற்கே முன்னுதாரணமாய் இருமொழி கொள்கையை வகுத்து நிறைவேற்றினார். திமுக 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்த போதும், தனது கட்சி வேட்பாளரிடம் காமராஜர் தோல்வியடைந்ததால் பெரும் அதிருப்தியடைந்திருந்தார். அதனால் 1968ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்ட சமயத்தில், அங்கு திமுக வேட்பாளரை நிறுத்த அண்ணா ஒப்புக்கொள்ளவில்லை.

மேலும், மத்திய திட்டக் குழுவில் முன்னாள் அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் இடம்பெற்ற போது, அவருக்கு பெரிய விழாவினை அண்ணா முன்னின்று நடத்தி, மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு வெங்கடராமன் ஆற்றிய பெரும் பங்கைப் பாராட்டிய அவர், “காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டாலும், வெங்கட்ராமனின் முடிக்கப்படாத பணிகளை முன்னின்று நடத்துவதில் திமு கழக அரசுக்கு ஆர்வம் இருக்கிறது. அதே போல் அவருடைய அறிவுரைகளையும் பின்பற்றத் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.
இத்தகைய செயல்களினால் தான் அண்ணா ஒரு உண்மையான அரசியல்வாதி என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார். உடல்நலக் குறைவால் அவர் மரணமுற்ற போது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் கலைஞர் ஆகியோரின் மரண ஊர்வலத்தில் காணப்பட்ட கூட்டத்தை விட, 1969ல் அண்ணாவின் மரண ஊர்வலத்தில் திரண்ட கூட்டத்தைச் சென்னைவாசிகள் எங்கும் கண்டதில்லை.
இன்று தமிழகத்தில், குறிப்பிடத்தக்கத் திராவிட கட்சிகள் (திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்றவை) தங்களின் உண்மையான தலைவரெனப் பேரறிஞர் அண்ணாவை அங்கீகரித்துள்ளன. அதுதான் அண்ணா விட்டுச் சென்ற மரபு. அவரது பெயர் பல தலைமுறைகளாகத் தொடர்ந்து தமிழக மக்களுக்கு ஊக்கமளிக்கும்.
பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு *டெக்கான் க்ரானிகல்ஸ்* இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையாகும்.
ஆங்கிலத்தில்: சீதாராம் குருமூர்த்தி (ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., முன்னாள் தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினர்) தமிழில்: விடுதலை தமிழ்முரசு