
நேபாளில் 2019ம் ஆண்டுக்கான 13வது தெற்காசிய போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா மொத்தமாக 312 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதில் 175 தங்கப்பதக்கங்களும் அடங்கும்.
இந்த மாதம் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை நேபாளின் தலைகநகரமான காத்மண்டுவிலும் மற்றும் போக்காரா நகரத்திலும் இந்த ஆண்டுக்கான தெற்காசிய விளையாட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இதில் மொத்தம் இந்தியா, நேபாள், இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், மாலத்தீவு மற்றும் பூடான் ஆகிய ஏழு நாடுகள் பங்கேற்றன. பத்து நாட்களாக நடைபெற்று வந்த இப்போட்டியில் இந்திய வீரர்–வீராங்கனைகள் மிகச் சிறப்பாக ஆடி 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலம் என மொத்தம் 312 பதக்கங்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. இப்போட்டியில் தொடர்ந்து 13வது முறையாக அதிக பதக்கங்களைப் பெற்றதுடன் 2016ம் ஆண்டில் பெற்ற 309 பதக்கங்களின் எண்ணிக்கை முறியடித்து சாதனைப் படைத்தது. நேற்று ஒரே நாளில் இந்திய வீராங்கனைகள் 6 தங்கமும் 1 வெள்ளியும் வென்றனர்.
இப்போட்டியின் மகளிர் மற்றும் ஆடவருக்கான கூடைப்பந்துப் போட்டிகளில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. ஸ்குவாஷ் மகளிர் போட்டியில் இந்தியாவிற்கு தங்கமும், ஆடவர் போட்டியில் வெள்ளியும் கிடைத்தது. குத்துச்சண்டையில் இந்தியா 12 தங்கம் உள்பட16 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது. இப்போட்டியின் தொடக்கம் மற்றும் நிறைவு விழா தசரத் ரங்கசால மைதானத்தில் நடைபெற்றது.