இந்தியாவில், புதிய கார்கள் விற்பனை விகிதம் சரிவை சந்தித்திருக்கும் தருவாயில், பழைய கார்கள் மீதான ஆர்வம் காரணமாக அதன் விற்பனை 2019ஆம் ஆண்டு 10 சதவிகிதம் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்திருப்பதாக ஓ.எல்.எக்ஸ் இந்திய பிரிவு நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
பழைய கார்கள் விற்பனையில் ஓ.எல்.எக்ஸ் நிறுவனம் முன்னிலை வகித்து வருகிறது. இதன் வருகைக்கு பிறகே பழைய கார்கள் விற்பனை அமோகமாகி ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுதொடர்பாக இந்நிறுவனம் கடந்த ஒரு வருடத்தில் கார்களை விற்றவர் மற்றும் பழைய கார்களை வாங்கியவர் என்ற முறையில் நாடு முழுவது 1,500 நபர்களிடம் தனது ஆய்வை மேற்கொண்டது.
அதில், கடந்த 2018ஆம் ஆண்டு 4 மில்லியனாக இருந்த விற்பனை, நடப்பாண்டில் 4.4 மில்லியன் அளவாக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வகையான கார்களை 90’ஸ் கிட்ஸ் என்றழைக்கப்படும் பருவத்தினரே அதிக விரும்புவதாக ஆய்வு தெரிவிக்கிறது. இதில் 36 சதவிகிதம் பேர் புதிய கார்களை வாங்குவதற்காக பயன்படுத்தியதை விற்கும் ஆர்வத்திலும், 17 சதவிகிதம் பேர் பழைய கார்களை புதுப்பித்துக்கொள்ளும் ஆர்வத்திலும் இருக்கின்றனர்.
மேலும் அந்த ஆய்வில், இந்தியாவின் மொத்த ஆட்டோமொபைல் விற்பனையில், பழைய கார்கள் தனது ஆதிக்கத்தை விரிப்படுத்தியுள்ளதாகவும், 2020ஆம் ஆண்டில் 5 மில்லியன் அளவிலும், 2023ஆம் ஆண்டில் 6.6 மில்ல்லியன் அளவிலும் பழைய கார்கள் விற்பனை வளர்ச்சியடையுமெனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு சதவிகிதம் அளவிற்கு 90’ஸ் பருவத்தினர் இருப்பதாகவும், அவர்களுடைய பழைய கார்கள் மோகத்தினால் இத்துறை இன்னும் வளர்ச்சியடையுமெனவும் ஓ.எல்.எக்ஸ் நிறுவனம் கூறுகிறது. மேலும், இப்பருபவத்தினர் இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்திய சந்தையின் மிக பெரிய நுகர்வோர்களாக உருவெடுப்பர் என ஓ.எல்.எக்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பழைய வாகன விற்பனை சந்தையின் தற்போதைய மதிப்பு சுமார் 14 பில்லியன் அமெரிக்கன் டாலர் ஆகும். மேலும் இது 2023ஆம் ஆண்டில் 25 பில்லியன் அமெரிக்கன் டாலராக சந்தை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.