Categories: அரசியல்

பீமா கோரிகான் கலவரம்: பேராசிரியர் வீட்டில் சோதனை!

டெல்லி: பீமா கோரிகான் கலவர வழக்கில் தொடர்பாக, டெல்லி பல்கலைக்கழக ஆங்கில பேராசிரியரும், சமூக நீதி கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர்.ஹன்னி பாபு வீட்டில் புனே போலீசார் இன்று (செப்.10) சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018 ஆண்டு ஜனவரியில், பீமா கோரிகான் போரின் இருநூறாவது ஆண்டு நினைவு தினத்தைக் கடைப்பிடிக்க மக்கள் குழுமியிருந்தபோது, மிகப்பெரிய அளவில் கலவரம் வெடித்தது. சில வலதுசாரி அமைப்புகளால் அந்தக் கலவரம் ஏற்படுத்தப்பட்டதாக சமூகச் செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

அதன் பிறகு தான் “அர்பன் நக்சல்” என்ற சொல்லாடல் அரசியல் தளத்தில் தளத்தில் வெகு பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டையே உலுக்கிய இந்த கலவரத்தில் குஜராத் எம்எல்ஏவும், தலித் அமைப்பின் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி, ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் உமர் காலீத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் மாவோஸ்ட்களோடு தொடர்பு இருப்பதாக கூறி மனித உரிமைச் செயற்பாட்டாளருமான சுதா பரத்வாஜ், குடிமையுரிமை செயற்பாட்டாளர்களான கௌதம் நவ்லகா, வெர்னான் கன்சால்வஸ், அருண் பெரைரா, கவிஞர் வரவர ராவ் ஆகியோரை வீட்டு காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், பேராசிரியர் டாக்டர்.பாபு வீட்டில் பீமா கோரிகான் கலவர வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி துணை ஆணையர் சிவாஜி பவார் தலைமையிலான புனே போலீசார் திடீரென சோதனையை மேற்கொண்டனர்.

இது குறித்து பேராசிரியர் பாபு அவர்களின் மனைவி ஜென்னி என்பவர், அவரது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், போலீசார் பிடியாணை ஏதுமின்றி 6 மணிநேரத்திற்கு மேலாக சோதனையிட்டதாகவும், வீட்டிலிருந்து லேப்டாப், பெண் டிரைவ் போன்றவற்றை எடுத்துக்கொண்டு சென்றதாகவும் தெரிவித்துளளார்.

இந்த சோதனை குறித்து துணை ஆணையர் சிவாஜி பவார் கூறுகையில், பேராசிரியர் ஹனி பாபு மீது எந்த விதமான கைது நடவடிக்கையும் இல்லை எனவும், அவரது வீட்டிலிருந்து சில மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், பீமா கோரிகான் பேரணியின் போது கலவரம் ஏற்படும் வகையில் பேசியதாக பேராசிரியர் பாபு மீது விஷ்ரம்பக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையிலே சோதனை மேற்கொண்டதாக கூறினார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்