Categories: அரசியல்

பீமா கோரேகான் வழக்கு: கௌதம் நவ்லகா மனு தள்ளுபடி!

பீமா கோரேகான் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் கௌதம் நவ்லகா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய தொடரப்பட்ட மனுவை மும்பை உயர்நீதிமன்றம் இன்று (செப்.13) மறுத்துவிட்டது.

வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு, முழுமையான விசாரணை தேவை என்று உணருவதாக நீதிபதிகள் ரஞ்சித் மோர் மற்றும் பாரதி டாங்க்ரே ஆகியோரின் அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கு அடிப்படை ஆதாரத்தோடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு புனே மாவட்டத்தில் உள்ள பீமா கோரேகானில் நடைபெற்ற 200ஆம் ஆண்டு போர் வெற்றி விழாவில் வன்முறை வெடித்தது. மேலும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாதி கலவரம் உருவாக்கி மஹாராட்டிரா மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ரோனா வில்சன், சுதா பரத்வாஜ், சுதிர் தவாலே, மகேஷ் ராவத், சோமா சென், வரவர ராவ் உள்ளிட்ட ஒன்பது செயற்பாட்டாளர்களும் நக்சல்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறிக் கைதுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு எழுத்தாளர்கள் ஆனந்த டெல்டும்டே, கௌதம் நவ்லகா உதவியதாகக் கூறி அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தை அணுகி இந்த வழக்கிலிருந்து இருவரும் வெளியேறினார்கள். ஆனால் புனே போலீசாரால் தொடரப்பட்ட “எல்கார் பரிஷத்” வழக்கில் கௌதம் நவ்லகா இணைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கௌதம் நவ்லகா மற்ற பிறருக்கும் நக்சல் அமைப்புகளோடு தொடர்பு இருப்பதாகவும், அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதாகவும் புனே காவல்துறை குற்றம் சாட்டியிருந்தது.

உயர்நிதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டிற்கு உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கு ஏதுவாக மூன்று வாரத்திற்கு கௌதம் நவ்லகா’வை கைது செய்ய தடை பிறப்பித்ததுள்ளது மும்பை நீதிமன்றம்.

கௌதம் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2018ஆம் ஆண்டு நக்சல் அமைப்பால் ஆறு காவல்துறையினர் கடத்தப்பட்ட போது கௌதம் சமாதான தூதராக நியமிக்கப்பட்டார். இத்தகைய நபரை தேசம் கொண்டாட வேண்டும். ஆனால் தேசத் துரோகம் போன்ற குற்றச்சாட்டுகளால் அரசாங்கம் அவரைத் துன்புறுத்துகிறது. தன்னுடைய புத்தகத்திற்காகவும், ஆராய்ச்சிக்காகவும் மட்டுமே இவர் நக்சல் அமைப்புகளோடு தொடர்பு வைத்த்துள்ளார். ஆகவே இதனை வைத்து நக்சலோடு தொடர்பு இருப்பதாக ஜோடிக்கக்கூடாது என அவரின் வழக்கறிஞர் சவுத்ரி வாதாடினார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்