பிரதமரின் ஆலோசனை குழு மறுசீரமைக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள், மூன்று புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நிதி அமைச்சகம், பொருளாதார வல்லுநர்களான நீல்காந்த் மிஸ்ரா, நீலேஷ் ஷா மற்றும் அனந்த நாகேஸ்வரன் ஆகியோர் இரண்டு வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இவர்களில், நீல்காந்த் மிஸ்ரா இந்திய ஈக்விட்டி ஸ்ட்ராட்டர்ஜி ஃபார் கிரெடிட் சூயிஸின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். அதே போல, நீலேஷ் ஷா கொட்டாக் மகேந்திரா அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். மேலும் அனந்த நாகேஸ்வரன், கிரியா பல்கலைக்கழகத்தில் ஐ.எஃப்.எம்.ஆர் வணிக பள்ளியின் டீன் ஆவார்.
கடந்த மாதம் பகுதி நேர உறுப்பினர்களாக பணியாற்றிய ரதின் ராய் மற்றும் ஷாமிகா ரவி ஆகியோர் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப்பட்டனர். அதே நேரத்தில் சஜ்ஜித் சினாய் அதில் சேர்க்கப்பட்டார்.

இவர்களில் ராய் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தில் இயக்குநராகவும், ரவி ப்ரோக்கிங் இந்தியா நிறுவனத்தில் ஆராய்ச்சி இயக்குநராகவும் தற்போது உள்ளனர்.
கடந்த ஜூலை மாதம், மத்திய அரசின் வெளிநாட்டுக்கு கடன் பாத்திரங்கள் வெளியீட்டை விமர்சித்த ராய், நிதி சிக்கல் எழுந்திருப்பதை வெளிப்படையாக ராய் விமர்சனம் செய்த்திருந்தார்.
அதே போல சமிகா ரவி, “இந்தியா தற்போது பெரும் பொருளாதார தேக்கநிலையைச் சந்தித்து வருகிறது. இதனைச் சமாளிக்க அனைத்து துறைகளுக்கும் இலக்கு நிர்ணயித்து, தேசிய வளரச்சித் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். பொருளாதாரத்தை சீர்படுத்த பெரிய சீர்திருத்தங்கள் தேவைப்படும்; வெறும் ஒட்டுவேலைகள் பயன்தராது. பொருளாதார வீழ்ச்சியை நிதியமைச்கத்திடம் மட்டும் விட்டுவிடுவது, நிறுவனத்தின் மொத்த வளர்ச்சியையும் கணக்குகள் துறையிடம் ஒப்படைப்பது போன்றதாகும்” என்று மத்திய அரசை விமர்சித்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.