Categories: அரசியல்

போராட்ட களத்தில் மம்தா!

போராட்ட களத்தில் மம்தா! 1

தேசிய குடிமக்கள் பதிவேடு முறையைக் கண்டித்து மேற்கு வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் அம்மாநில முதல்வரும், திரிணாமூல் காங்கிரசின் தலைவருமான மம்தா பனர்ஜி இன்று (செப்.12) போராட்டத்தில் ஈடுபட்டார்.

அசாம் மாநில மக்களில் குடியுரிமையை இறுதி செய்யும் வேலை தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த முறைக்கு ஆரம்ப முதலே எதிர்கட்சிகளும், பல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், தேசிய குடியுரிமைக்கான இறுதிப் பட்டியல் சமீபத்தில் வெளியானது. மொத்தம் 3.29 கோடி மக்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 19 லட்சம் மக்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள் அதிகமாக வாழும் அசாமில் மட்டுமே தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. தற்போது இந்த பட்டியலில் பெயர் இல்லாதோரின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.

இதனைக் கண்டித்து, மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பனர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியில் பேசிய மம்தா, தான் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்ப்பதாகவும், இதனைச் செயல்படுத்தத் துடிக்கும் பாஜக அரசைக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

வடக்கு கொல்கத்தாவில் தொடங்கிய இப்பேரணி நடைப்பயணமாக ஷியாம்பசார் வரை சுமார் 4.6 கிமீ தூரத்திற்கு திரிணாமூல் காங்கிரசின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் படை திரள நடைபெற்றது. பேரணியின் பொது பேசிய மம்தா, “எந்தவொரு சூழ்நிலையிலும் மதம், இனம் அல்லது சாதி அடிப்படையில் என்.ஆர்.சி’யை அனுமதிக்க மாட்டேன். பாஜக தலைமையிலான அரசாங்கம் என்.ஆர்.சி பிரச்சினையில் நெருப்புடன் விளையாடிக் கொண்டிருந்தது” எனக் கண்டனம் தெரிவித்தார்.

முன்னதாக, மேற்கு வங்காள மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், மேற்கு வங்காளத்தில் கிட்டத்தட்ட 2 கோடி அளவிலான மக்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியிருப்பதாகத் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த மம்தா, 2 கோடி மக்களை நீக்குவதாகச் சொல்கிறார்கள், முடிந்த இருவரையாவது தொட்டுப் பார்க்கட்டும் என சவால்விட்டார். மேலும், இந்த மாத தொடக்கத்தில், டி.எம்.சி, இடது சாரிகள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டமன்றத்தில் என்.ஆர்.ஐ’க்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்