
கர்நாடகா மாநிலத்தில் கே.சி.ராமமூர்த்தி ராஜினாமாவை அடுத்து மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி மேலும் ஓர் இடத்தை இழந்திருக்கிறது. பெங்களூருவில் ஐஜியாக பணியாற்றிய ராமமூர்த்தி ஓய்வு பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இவர் கர்நாடகாவில் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார், தற்போது வழக்கில் சிக்கிய டி.கே.சிவக்குமாருக்கு மிகவும் நெருங்கியவர் என்று கருதப்படுகிறது. டிகே சிவக்குமார் தற்போது நிதிமுறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு நெருக்கமான ராமமூர்த்தி தன் எம்.பி. பதவியைத் துறந்தார். இவரது பதவிக்காலம் ஜூன் 2022 வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ராஜினாமாவை அடுத்து காங்கிரஸ் கட்சிக்கு 45 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். அடுத்த ஜூனில் எம்.பி.க்கள் ராஜிவ் கவுடா, ஹரிபிரசாத் ஆகியோரின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.
கடந்த சில மாதங்களாக பாஜகவிடம் 7 எம்.பி.க்களை எதிர்க்கட்சிகள் இழந்துள்ளனர். ராமமூர்த்தியும் பாஜகவில் சேர்கிறார் என தெரிகிறது. தெலுங்கு தேச எம்.பி.க்கள் 4 பேர், சமாஜ்வாதி கட்சியிலிருந்து 2 எம்.பி.க்கள் காங்கிரஸிலிருந்து ஒரு எம்.பி. என்று ராஜினாமா படலமாக தொடர்கிறது.