Categories: அரசியல்

முதல்வருக்கு பாராட்டு விழா: திமுக தலைவர் அறிக்கை!

அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு, சுற்று பயணம் தொடர்பான விளக்கத்தை முதல்வர் பழனிசாமி இரண்டு நாட்களில் தமிழக மக்களுக்குப் பதில் சொல்வாரேயானால் திமுக பாராட்டு விழா நடத்தும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். இந்நிலையில் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாடு திரும்பியவர் திமுகவை  விமர்சனம் செய்திருந்தார். 


இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (செப்.10) வெளியிட்ட அறிக்கையில், “வெளிநாடுகளின் முதலீடுகளைப் பெறப் போகிறோம் என்று சொல்லி வெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பயணம் ஏற்படுத்தியுள்ள கோணலால், விரக்தியின் உச்சத்திற்கே சென்று, “ஸ்டாலின் தான் நினைத்ததை நடத்த முடியாத காரணத்தால் என் மீது எரிச்சலும், பொறாமையும் கொண்டு பேசி வருகிறார்” எனப் பேட்டியளித்திருப்பது, பாடத் தெரியாமல் பக்க வாத்தியத்தில் குறை கூறியது போன்ற முட்டாள்தனமானது.
சுற்றுப் பயணம் சென்றிருந்த முதல்வர் கட்சி நிதியிலிருந்து கொடுப்பதுபோல் விளம்பரங்களை அரசு நிதியிலிருந்து கொடுத்திருந்ததைப் பார்த்த மயக்கத்தில் என் மீது பாய்ந்திருக்கிறார். அரசுப் பணத்தில் இத்தகைய விளம்பரங்களை வெளியிடுவது நிதி ஒழுங்கீனம் என்பதை உடன் சென்ற தலைமைச் செயலாளர் உணர்த்தியிருக்க வேண்டும்.

தமிழகத்தில் இன்றைக்குள்ள தொழிற்சாலைகளும், மாநிலத்திற்குக் கிடைத்த நேரடி அந்நிய முதலீடுகளும் திமுக ஆட்சியில் பெறப்பட்டவை என்ற அடிப்படை விவரத்தைக் கூட அவர் மறந்திருக்கிறார் அல்லது மறைத்திருக்கிறார். அவருடன் சென்றிருந்த தலைமைச் செயலாளரே துபாயில், திமுக ஆட்சியில் கிடைத்த அந்நிய முதலீடுகளையும் சேர்த்து அங்குள்ள தொழிலதிபர்களிடம் தமிழகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டி முதலீடு கோரியிருக்கின்ற நிலையிலும், பக்கத்திலிருந்த முதல்வர் பழனிசாமி, திமுக ஆட்சியில் தமிழகம் கண்ட தொழில் வளர்ச்சி தெரியாமலும் புரியாமலும் விமான நிலையத்தில் பேட்டி அளித்திருக்கிறார்.

திமுக ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு முறை நடத்தாமல், ‘விளம்பர மேளா’ இல்லாமல், இதுபோன்று அரை டஜன் அமைச்சர்களும், முதல்வரும், ரத கஜ துரக பதாதிகளுடன் படையெடுத்துச் செல்லாமல், தமிழகம் முதலீட்டுக்குத் தக்க இடம் என்றிருந்ததால், தானாக வந்த முதலீடுகளால், இன்றைக்குத் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலும், அம்பத்தூர் முதல் காஞ்சிபுரம் வரையிலும் தொழிற்சாலைகள் அணி வகுத்து நிற்கின்றன.

திமுக ஆட்சியில் 2006 முதல் 2010 மார்ச் வரை மட்டும் 46,091 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு 2.21 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. முதல்வர் பொறுப்பிலிருந்த தலைவர் கருணாநிதியும், தொழிற்துறை அமைச்சராக என் நிர்வாகத்திலும், வெளிப்படையாகவும், விரைவாகவும் முடிவெடுத்தல், ஒற்றைச் சாளர முறையில் தொழிற்சாலைகளுக்கு அனுமதியளித்தல் உள்ளிட்ட கமிஷன் இல்லாத அனுமதிகள் மூலம் தொழிற்சாலைகள் தமிழகத்தில் பெருகின. இந்த மாநிலமே இந்திய நாட்டில் வளர்ச்சியின் நட்சத்திரமாக விளங்கியது என்றார்.
மேலும், அவர் தெரிவிக்கையில்; இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பித் தேர்வு செய்து முதலீடு செய்யும் முதன்மை மாநிலமாக திமுக ஆட்சியில்தான் விளங்கியது என்ற அடிப்படை விவரம் கூட அவசரத்திலும், அரசியல் விபத்தின் காரணமாகவும் முதல்வரான எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியவில்லை. 

2015-ல் நடந்த முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் காணவில்லை; கானல் நீராகிப் போனது. 2019-ல் நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்னவென்றே தெரியவில்லை; காற்றில் கறைந்து விட்டதோ? தமிழகத்தில் தொழில் தொடங்க வந்த முதலீட்டாளர்கள் ஏன் வெளிமாநிலங்களுக்குச் சென்றார்கள் என்ற விவரமும் வெளியாகவில்லை.

மேலும், இப்போது போட்டுள்ளதாகக் கூறப்படும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன ஆகுமோ என்றும் தெரியவில்லை. அரசு கஜானாவில் பணம் எடுத்து அதிமுக ஆட்சியில் நடந்த, உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், ‘இவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன’ என்று சட்டப்பேரவையில் ஒரு வெள்ளையறிக்கை வைக்காத முதல்வர், வெளிநாட்டுப் பயணத்தில் அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஏமாற்றத்தின் அல்லது படுதோல்வி மனப்பான்மையின் வெளிப்பாடாக திமுகவை விமர்சிக்கிறார்.

அதிமுக ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனை கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன; அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு – செயல்படும் தொழிற் நிறுவனங்கள் எத்தனை; அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டன என்பதையெல்லாம் விரிவான வெள்ளை அறிக்கையாக உருவாக்கி, இதோ பிடியுங்கள் நீங்கள் கேட்கும் வெள்ளை அறிக்கை என்று முதல்வர் பழனிசாமி வெளியிடத் தயாராக இருப்பாரேயானால், முதல்வருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா நடத்தத் தயாராக இருக்கிறேன். என் சவாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளத் தயாரா? இரண்டு நாட்களில் தமிழக மக்களுக்குப் பதில் வேண்டும்; சிலரைப் பலநாள் ஏமாற்றலாம்; பலரைச் சிலநாள் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்றிவிட முடியாது என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்