உள்நாட்டு நிறுவனங்களுக்கும், புதிய உற்பத்தி நிறுவனங்களும் வரி குறைப்பை அறிவித்ததை அடுத்து மும்பை பங்குச்சந்தையில் 2000 புள்ளிகள் உயர்ந்துள்ளன.
கோவாவில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 25.2 சதவிகிதமாக குறைப்பதாக தெரிவித்தார்.
இச்செய்தியினை தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தையில் சென்செஸ் 2000 புள்ளிகள் உயர்ந்து உச்சத்தை அடைந்துள்ளன. அதே போல் நிப்டின் 11 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது.
பொருளாதார மந்தநிலையை சரி செய்ய வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாகவும், முதலீடுகளை அதிகரிக்கும் விதமாகவும், வரி விதிப்பில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் புதிய வரி சலுகை முதலாளிகளையும், முதலீட்டாளர்களையும் ஈர்த்துள்ளதால், இத்தகைய பங்குகளின் உயர்வு ஏற்பட்டுள்ளது என பங்கு சந்தை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வருமான வரி சலுகை வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இன்று அறிவிக்கப்பட்ட கார்ப்பரேட்களுக்கான நிவாரண நடவடிக்கையால் பங்கு சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளன. இத்தகைய வரிகளில் நிவாரணங்களை வழங்குவதன் மூலம் நுகர்வையும், முதலீட்டையும் ஊக்குவிக்கலாம் என அரசு முடிவெடுத்துள்ளது.
நுகர்வின் மூலம் பெறப்பட்ட அதிக வரி வருவாயாலோ, கார்ப்பரேட்டுகள் தங்கள் சேமிப்பிலிருந்து புதிய வசதிகளில் முதலீடு செய்வதன் மூலமோ ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுசெய்ய நேரம் எடுக்கும். இதற்கிடையில் நிதி நிலைமை சற்று அழுத்தங்களை சந்திக்க நேரிடும். அந்நிய முதலீடுகள் மற்றும் அன்னிய நேரடி முதலீட்டிலிருந்து ஈடுசெய்யப்படும் பணப்புழக்கம் போதுமானதாக இல்லாவிட்டால் இது வட்டி விகிதங்களை பாதிக்கும்” என்று ஹெச்.டி.எப்.சி யின் சில்லறை வணிக ஆராய்ச்சிக் குழு தலைவர் தீபக் தெரிவித்துள்ளார்.