ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உயர்நீதி மன்றத்தின் செயல்பாடுகளை பார்வையிட ஸ்ரீநகர் செல்லவிருப்பதாக உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இன்று (செப்.16) தெரிவித்துள்ளார்.
குழந்தை நல ஆர்வலரான எனாக்ஷி கங்குலி, ஸ்ரீநகரில் உள்ள உயர்நீதி மன்றத்தை தங்களால் நாட முடியவில்லை என உச்சநீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், மக்களால் உயர்நீதி மன்றத்தை அணுக முடியவில்லை என்பது மிக பெரிய சர்ச்சையாகும் என்று கூறியவர், 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, தனியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்டதை தொடர்ந்து விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், உயர் நீதிமன்றம் மனுதாரர்களுக்கு அணுக கூடிய வகையில் இருக்கிறதா என்பது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றதிற்கு உத்தரவிட்டார்.

மேலும், ஸ்ரீநகர் உயர்நீதி மன்றம் மனுதாரரின் குற்றச்சாட்டிற்கு மாறாக அறிக்கையை வழங்கும் பட்சத்தில், கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்தார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும், உச்சநீதி மன்றம் இன்று விசாரித்து வருகிறது. அதே போல, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் தொடர்ந்த மனுவின் படி, அவரை ஸ்ரீநகர் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான பாருக் அப்துல்லாவை காவலில் வைத்துள்ள விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.