இராதாபுரம் சட்டமன்ற தேர்தலின் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் இன்று (அக்.4) தடை விதித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளரான இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக திமுக வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான அப்பாவு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், இராதாபுரம் தொகுதி வாக்குகளை மறுமுறை எண்ணமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை 11.30 மணி அளவில் உயர்நீதிமன்றம் கண்காணிப்பின் கீழ் தபால் ஓட்டுகள் மற்றும் சர்ச்சைக்குரிய 34 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தன.
ஆனால் மறுவாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார் அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை. ஆனால் நீதிபதிகள் அதனை புறக்கணிக்கவே, அவர் உச்சநீதி மன்றத்தை நாடினார்.
தற்போது, மறுவாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், முடிவுகளை அறிவிக்க உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. அக்டோபர் 23ஆம் தேதி வரை இந்த தடை உத்தரவு இருக்குமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தலில் பதிவான மொத்தம் 1508 தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் அப்பாவு 863 வாக்குகளும், அஇஅதிமுக வேட்பாளர் இன்பதுரை 200 வாக்குகளும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.