
துருக்கி நாட்டின் அரசு உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகவும் அப்பாவி மக்கள் மீது அதனைப் பயன்படுத்துவதாக சிரியாவிலுள்ள குர்துக்கள் அந்நாட்டின் மீது குற்றம் சாட்டியுள்ளது.
சிரியா நாட்டின் வடகிழக்கில் வசிக்கும் குர்துக்களுக்கும் துருக்கி நாட்டிற்கும் இடையே கடந்த ஒரு வாரமாக சண்டை நிலவி வருகிறது. இதற்கிடையே அடுத்தகட்டமாக துருக்கி அலேப்போ மாகாணத்தின் மன்பிஜ் நகரை தாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவுவதால் அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் அவ்விடத்தில் இருந்து பாதுகாப்பான பகுதிக்குச் சென்று தங்கிவருகின்றனர். மேலும் சிரியாவின் வடக்கு பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 637 குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.
போரை நிறுத்த குர்து – சிரியாவின் ராணுவப் படைகள் ஒன்று சேருமென்று ரஷ்யா கூறியுள்ளது. துருக்கி தங்களைத் தாக்கலாம் என்று சிரியாவின் எல்லைகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே துருக்கி அரசு உலக நாடுகளால் தடை விதிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு குர்து மக்களைக் தாக்குகிறதாக குர்துக்கள் குற்றம் சாட்டியுள்ளது.