
மகாத்மா காந்தியின் 150- வது பிறந்த விழாவையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடினார். அப்போது மகாத்மா காந்தி பற்றிய குறும்படம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில், முன்னணி நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான், நடிகைகள் கங்கனா. ரணவத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தயாரிப்பாளர் போனிகபூர், ஏக்தா கபூர், இம்தியாஸ் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது காந்தியின் போதனைகளை பரப்புவதில் திரைத்துறை முக்கிய பங்காற்றுவதாக தெரிவித்த மோடி, 1947 வரையிலான சுதந்திர போராட்ட எழுச்சியையும், 1947 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான நாட்டின் வளர்ச்சியையும் திரைத்துறை படமாக எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் தண்டியில் உள்ள அருங்காட்சியகத்தை அனைவரும் பார்வையிடுமாறு மோடி கேட்டுக் கொண்டார்.பின்னர் பிரதமருடன் நடிகர் நடிகைகள் ஆர்வமாக செல்பி எடுத்து கொண்டனர்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, திரையுலக பிரபலங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார். காந்தி பற்றிய விழிப்புணர்வுகளைப் பரப்புவதில் கலைஞர்களின் பங்கு குறித்து மோடி தங்களிடம் கலந்துரையாடியதற்கு நன்றி என நடிகர் ஷாருக்கான் ட்வீட் செய்துள்ளார்.