
2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணி தலைமையில் பல்வேறு யுக்திகள் வகுக்கப்பட்டுள்ளன.கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் மாற்றம் முன்னேற்றம் என்ற முழக்கத்துடன் மக்களை சந்தித்தார். புதுவிதமான பிரச்சார யுத்திகளையும் கையாண்டார். மேலும், மதுவுக்கு எதிரான அவரது பிரச்சாரம் மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. மாற்று அரசியலை முன்வைத்த போதும் ஜெயலலிதா, கருணாநிதி என்ற பெரிய ஆளுமைகள் அப்போது இருந்ததால் அன்புமணியால் அப்போது வெல்ல முடியவில்லை.
ஆனால், இன்றைய நிலவரம் வேறு மாதிரி உள்ளது. இதனை புரிந்துக்கொண்ட அன்புமணி ராமதாஸ், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமகவை குறிபிட்ட தொகுதிகளில் வெற்றிபெற வைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளார். குறிப்பாக பாமகவின் வாக்குவங்கி உள்ள வடதமிழகத்தில் 90 தொகுதிகளை அடையாளம் கண்டு அங்கு தீவிர களப்பணியை முன்னெடுத்துள்ளார்.
தம்பிகள் படை, தங்கைகள் படை என இரண்டு படைகளை அமைத்து அதில் ஒவ்வொரு படைக்கும் 1000 இளைஞர்கள், இளம்பெண்களை சேர்த்து அவர்கள் மூலம் தொகுதியில் ஒரு லட்சம் பேரை மக்கள் படையாக உருவாக்க திட்டமிட்டுள்ளார் அன்புமணி. வடதமிழகம் மட்டுமல்லாமல் தமிழகம் தழுவிய அளவிலும் பா.ம.க.வை வலுப்படுத்த இளைஞர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.