நேற்று இரவு நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்த செய்தி மிகவும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. 90களில் தொடங்கி இன்றளவும் முண்ணனி நடிகையாக இருந்து வருபவர் நடிகை மீனா. இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகருக்கும் 2009ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளனர். புத்தாண்டின் போது மீனாவின் குடும்பத்தினர் அனைவரும் கொரானாவால் பாதிக்கப்பட்டனர். இதிலிருந்து அனைவரும் மீண்ட நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கடுமையான நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் யாரும் எதிர்பாராத நிலையில் நேற்று இரவு திடீரென காலமானார். அவருக்கு வயது 46.

அவருக்கு திரையுலகினர் மட்டுமின்றி பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் கலா மாஸ்டர், நடிகை லெட்சுமி, இயக்குனர் சேரன், போன்ற பல பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சக நடிகையான குஷ்பூ ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் காலையில் எழுந்தவுடன் இப்படியொரு சோக செய்தியை கேட்க நேர்ந்துவிட்டதே என்றும், சாகர் நம்முடன் இல்லை, அவர் நுரையீரல் பாதிப்பால் பலநாட்கள் போராடி வந்தார், வாழ்க்கை மிக கொடுமையானது, மீனாவுக்கும், அவரது மகளுக்கும் எவ்வாறு ஆறுதல் சொல்வது, அவரது இழப்பை எழுத வார்த்தைகள் இல்லை, அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார் குஷ்பூ.

பிறகு சிறிது நேரம் கழித்து இன்னொரு ட்வீட்டை போட்டுள்ளார். அதில், ஊடகங்கள் கொஞ்சம் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மீனாவின் கணவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு கோவிட் இருந்தது. கோவிட் அவரது நுரையீரல் நிலையை மோசமாக்கியது. தயவு செய்து சாகரை கோவிட் நோயால் இழந்துவிட்டோம் என்று கூறி தவறான செய்தியை பரப்பாதீர்கள் மற்றும் எந்த வித பயத்தையும் அல்லது படபடப்பை ஏற்படுத்தாதீர்கள். ஆம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஆனால் தயவுசெய்து இவ்வாறு தவறான செய்தியை பரப்பாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். காலையில் கலா மாஸ்டர் பேட்டியளிக்கும் போது அவர் கோவிட் தொற்றால் வந்த அழற்சியில்தான் இறந்தார் என்று கூற, குஷ்பூ அதற்கு மாறாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
