
அட்லி – விஜய் கூட்டணியில் 3 ஆவது முறையாக உருவாகி வெளியாகியுள்ளது பிகில். இன்று உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஜய் ராயப்பன், மைக்கேல், பிகில் என்று 3 கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்கு வந்துள்ள இப்படத்திற்கு முதலில் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றாலும் அதன் பிறகு அரசிடம் சிறப்புக் காட்சிக்கு தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை ஒப்பு கொண்ட அரசு, இன்று ஒருநாள் மட்டும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் 5 மணிக்கு முதல் நாள் முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது. இரவு முழுவதும் காத்திருந்த ரசிகர்களுக்கு ராயப்பனின் தரிசனம் 5 மணிக்கு அளவில் கிடைத்துள்ளது.
வழக்கம் போல் இந்தப் படமும் திருட்டுக் கதை வழக்கில் நீதிமன்றம் வரை சென்றது. எனினும், இதுவரை இந்தப் படத்திற்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை. இயக்குநர் கேபி செல்வா என்பவரும், சூளைமேட்டைச் சேர்ந்த அம்ஜத் மீரான் என்பவரும் பிகில், தங்களது கதை என்று உரிமை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், பல தடைகளையும் தாண்டி இன்று உலகம் முழுவதும் பிகில் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ட்விட்டரில் ரசிகர்கள் விமர்சனம் வரவேற்கத்தக்க வகையில் கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் பிளாக் பஸ்டர் ஆகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.