
அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போரால் இந்திய உற்பத்தியாளர்களுக்கு புதிய ஏற்றுமதி வாய்ப்பினை உருவாக்கி தந்துள்ளன. இதனை இந்திய ஏற்றுமதியாளர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
தேசிய வர்த்தக வாரியத்தின் உயர்மட்டக் கூட்டம் டெல்லியில் இன்று (செப்.12) நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் கோயல், “அமெரிக்காவுடனான வர்த்தக பற்றாக்குறை 17 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலும், சீனாவுடன் 53 பில்லியன் டாலர் அளவிலும் வர்த்தக தட்டுப்பாடு இருக்கிறது. தற்போது உலகின் பல்வேறு இடங்களில் விவசாயம் மற்றும் மருந்திற்கான சந்தையை ஆராய்ந்து நமது ஏற்றுமதியை அதிகரிக்க வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.
மேலும் பேசிய அவர், நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதிகள் குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டவில்லை. தற்போதைய ஏற்றுமதி விகிதம் திருப்திகரமாக இல்லை. ஆகையால் இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்றுமதி மையத்தை அமைக்க அனைத்து மாநிலங்களும் முயற்சி செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.
இந்தியாவின் ஏற்றுமதி 2018-2019 நிதியாண்டில் 537 பில்லியன் அமெரிக்கன் டாலராக இருக்கிறது. இதில் 205 மில்லியன் டாலர் அளவிற்கு சேவை சார்ந்த ஏற்றுமதி பங்களித்துள்ளது.
தொடர்ந்து உரையாற்றிய அவர், அடுத்த ஐந்து வருடத்தில் ஒரு ட்ரில்லியன் டாலர் அளவிற்கு நமது ஏற்றுமதி இருக்க வேண்டும். அதற்காக உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, சர்வதேச சந்தையின் போட்டிக்கு தகுந்தது போல் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கும், போக்குவரத்து செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும். தற்போது 60 சதவிகிதமாக இருக்கும் காப்பீட்டுத் தொகையுடனான கடன் திட்டத்திற்கு பதிலாக 90 சதவிகிதமாக கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது 10 பொது துறை வங்கிகள் இணைக்கப்பட இருக்கும் முடிவு, உற்பத்தியாளர்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் கடன்களை தர உதவியாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.