
தமிழக உள்ளாட்சி தேர்தல்களுக்கு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், புதுக்கோட்டை நகரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திண்ணை பிரசாரத்தை செய்து வருகிறார்.
இதற்கு முன்னதாக புதுக்கோட்டை அசோக்நகர் அருகே உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட அதிமுக சார்பில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடர்பான ஆலோசனை வழங்கும் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய விஜயபாஸ்கர்,எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும் என கூறினார்.
தொடர்ந்து 42-வது வார்டு மக்களை நேரில் சந்தித்த அவர், மக்களின் நிறைகுறைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் அமைச்சரிடம் கொடுத்தார்கள். தேர்தல் தேதி இன்னும் வெளியாகாத நிலையில், முன்னேற்பாடாக அ.தி.மு.க அமைதியாக பிரசாரத்தில் களமிறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.