பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் இணைந்து தற்போது வனிதா வீட்டில் வார இறுதியை பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு மிகுந்த விமர்சனங்களுடன் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 98 நாட்கள் நிறைவடைந்து பிக்பாஸ் 7 இறுதி கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.
முதலில் 18 போட்டியாளர்கள், அதன் பின்பு வைல்டு கார்டு போட்டியாளர்கள் என்று மொத்தம் 23 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது ஏழு பேர் மட்டுமே மீதம் விளையாடி வருகின்றனர். இந்த வாரம் நாமினேஷனில் வீட்டில் இருந்த அனைவரும் சிக்கி இருந்தனர்.

இந்த நிலையில் இந்த வாரம் விசித்ரா வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த வெளியேற்றத்தை ரசிகர்கள் பலரும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை் அதற்கு காரணம் விசித்ரா முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட சீனியர்களைப் போல் அல்லாமல், வயது மூத்தவராக இருந்த போதிலும் 98 நாட்களில் சிறப்பாக விளையாடி வந்தார்.

ஆனால் அவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு இருப்பது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று கணிக்க முடியாத அளவிற்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. டிக்கெட் டூ ஃபினாலேவில் விஷ்ணு வெற்றி பெற்று இருக்கும் நிலையில் மாயா, அர்ச்சனா, தினேஷ், மணி, விஜய் வர்மா என மொத்தம் ஆறு பேர் இறுதி மேடையை அலங்கரிக்க இருக்கின்றனர்.

இறுதி கட்டங்களை நோக்கி நிகழ்ச்சி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஜோவிகா, பூர்ணிமா, நிக்சன், சரவண விக்ரம் மற்றும் அவரது தோழி வி.ஜே தீபிகா ஆகிய அனைவரும் இணைந்து வனிதாவின் வீட்டில் இன்று வீக் எண்டை சிறப்பாக கொண்டாடி இருக்கின்றனர்.

அந்த புகைப்படங்களை வனிதா தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, “அனைவரையும் மீண்டும் வரவேற்கிறேன். மேலும் இந்த புத்தாண்டை பாட்டியுடன் கொண்டாடுவோம்” என்று பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.