பொருளாதாரம் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்க வேண்டுமென முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இன்றைய நிலை – நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார்.அப்போது பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில், “மோடி இந்திய பொருளாதாரத்தை சீரழித்து விட்டார். 2001-02, 2008-09, 2012-13 ஆகிய ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் தேக்க நிலையை சந்தித்த போதும் கூட அதிலிருந்து மீண்டுவிட்டோம். ஆனால் தற்போது எழுந்துள்ள பொருளாதார மந்த நிலையை சீரமைக்க, என்றாவது ஒருநாள் அறிஞர் மன்மோகன் சிங்கை அழைத்து பேசி இருப்பார்களா? எதிர்க்கட்சியில் இருந்து யாரும் வேண்டாம், ஒபாமாவே புகழ்ந்த மன்மோகன் சிங்கை ஏன் மோடி அழைத்து ஆலோசனை கேட்கவில்லை” என குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், “48 மணிநேரத்திற்குள் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென என்ன அவசரம் அவர்களுக்கு இருக்கிறது? இரவு 12 மணிக்கு குடியரசு தலைவர் கையெழுத்திட என்ன அவசரம்? நல்ல வேலையாக அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு உறுப்பினர்கள் கிடைக்காமல் போனது. அவ்வாறு கிடைத்திருந்தால் சட்ட திருத்தம் கொண்டு வருவதற்கு பதிலாக, அரசியலமைப்பு சட்டம் கொண்டு வந்திருப்பார்கள்” என கவலை தெரிவித்தார்.