குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து “உண்மையில் இது தவறான சட்டம்” என மலேசிய பிரதமர் மகாதிர் முகமது விமர்சித்துள்ளார்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் போராட்டக்காரர்கள் கடும் அடக்குமுறைகளை சந்தித்து வருகிறார்கள்.
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் மத்தியில் இச்சட்டம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. இதன் எதிரொலியாக சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் இந்தியாவின் உள்துறை அமைச்சரான அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியது.

இதனை தொடர்ந்து, மலேசிய பிரதமர் இப்புதிய சட்ட திருத்தம் குறித்து பேசுகையில், இப்போது ஒரு மதச்சார்பற்ற நாடு என்று கூறும் இந்தியா, சில முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டு தான் வருந்துவதாக கூறினார்.
மேலும், இந்தச் சட்டத்தால் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். 70 ஆண்டுகளாக, எந்த பிரச்சனையும் இல்லாமல் குடிமக்களாக ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில், இதனை செய்ய வேண்டிய அவசியம் ஏன்? அதேபோல், இந்தியர்களை நாங்கள் ஏற்றக்கொண்டு அவர்களுக்கு குடியுரிமையும் வழங்கியுள்ளோம். அவர்களும் அரசியலில் பங்கு பெறுகிறார்கள். தற்போது நாங்கள் இந்தியர்களுக்கான குடியுரிமையை ரத்து செய்தால் என்னவாகும்? என்று பேசி இருக்கிறார்.
ஆனால் மகாதிர் முகமதின் கருத்தை நிராகரித்த இந்தியா, “உள்நாட்டு விவகாரம்” என நழுவியும் இருக்கிறது.