ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து மீண்டும் “ஆஸாதி” என்ற முழக்கம் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டம் இயற்றப்பட்டதிற்கு எதிராக போராடிய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை கையாண்டது. இதனால் அதிருப்தி அடைந்த டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைத்து போராட்டம் நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் வலுத்தது. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆகவே பிரதமர் மோடியே தலையிட்டு விளக்கவுரை அளிக்க வேண்டிய நிலை உருவானது.
இதனால் அதிருப்தியடைந்த வலதுசாரி அமைப்புகள் நீண்டகால திட்டமிடலுக்கு பின்னர், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக இடசாரி மாணவர்கள் மீது முகமூடி அணிந்த நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி முன்னின்றாக சர்ச்சைகள் எழுந்தது. இதில் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ஐஷே கோஷ் தாக்கப்பட்டார்.

இந்நிலையில் அப்பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் முக்கிய அம்சமாக “ஆஸாதி” முழக்கம் ஒலித்து வருகிறது. மாணவர்களுடன் மக்களும் ஆஸாதி என்ற முழக்கத்தை எழுப்பி வருகிறார்கள். “ஆஸாதி” என்பதன் பொருள் விடுதலையாகும். இம்முழக்கத்தை முன்னாள் மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் பல்கலைக்கழக வளாகத்தில் பிரபலப்படுத்தினார்.