காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்ட நடைபெற்று வருகிறது. மாணவர்கள், பொது மக்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என ஒன்று திரண்டு போராடி வருகிறார்கள். மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வர் மம்தா நாள் தோறும் போராட்ட களத்தில் நின்று போராட்டத்தை வலுப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இது குறித்து விவாதிக்க அணைத்து காட்சிகள் கூட்டத்திற்கு வரும் ஜனவரி 13 ஆம் தேதி காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது என மம்தா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், மேற்கு வங்காளத்தில் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அதே வேளையில், கலவரம் ஏற்படுத்துவதை ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது. மேற்குவங்க மாநிலத்தில் நேற்று நடந்த முழுஅடைப்பு போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறையை ஏற்க முடியாது. இடதுசாரிகளும், காங்கிரசும், குடியுரிமைச் சட்டத்தை வைத்து மேற்குவங்கத்தில் மிகமோசமான அரசியல் செய்கிறார்கள். இதனை அனுமதிக்க முடியாது. வரும் 13-ம் தேதி குடியுரிமைச் சட்டம் தொடர்பாக விவாதிக்க டெல்லியில் சோனியா காந்தி கூட்டியுள்ள கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது. நாங்கள் தனித்தே போராடுவோம் என கூறியுள்ளார்.