
தமிழகம் கடந்த கோடை காலத்தில், பெரும் தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வந்தது. குறிப்பாக சென்னையில் பெரும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. எங்கு பார்த்தாலும் காலி குடங்களுடன் பொதுமக்கள் அலையும் நிலையை காண முடிந்தது. முக்கிய நகரங்களின் நிலத்தடி நீரும் தாழ்வான நிலைக்கு சென்று மக்களை கடும் சிரமத்தில் கொண்டு சென்றது. இதையடுத்து தென்மேற்குப் பருவமழை காரணமாக, தமிழகம் ஓரளவு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொண்டது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் சேகரிப்பிற்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வந்ததை காண முடிந்தது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, தண்ணீர் பற்றாக்குறைக்கு ஓரளவுக்கு குறைந்து வருகிறது . சென்னையில் நல்ல பருவமழை பொழிந்து, பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.இதனையடுத்து அவ்வப்போது ஆங்காங்கே தென் மேற்கு பருவமழை மழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்குப் பருவமழையின் தீவிரம் குறைந்துள்ளது. இருப்பினும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில்,திருவள்ளூர், காஞ்சிபுரம்,திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூர்,பெரம்பலூர்,அரியலூர்,தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம், புதுக்கோட்டை,வேலூர்,ராமநாதபுரம்,சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும்.