
தமிழர்களின் ஆதி வாழ்க்கை வரலாற்றை வெளிக்கொண்டு வந்தது கீழடி அகழாய்வுகள். இது தொடர்பான ஹேஷ்டேக்குகள் #கீழடிதமிழர் நாகரிகம் என்ற பெயரில் இந்திய அளவில் டிரெண்டிங்காகி முதலிடம் பிடித்துள்ளது.பாகிஸ்தானின் பலுசிஸ்தானையும் தாண்டி ஈரான், எகிப்து முதல் கடல் கொண்ட குமரிக் கண்டம் வரையிலான பெருநிலப்பரப்பு எங்கும் வாழ்ந்த ஆதிமனிதர்கள் தமிழர்களே என்பது சிந்துசமவெளி ஆய்வாளர்களின் கருத்துக்கள்.
சிந்துசமவெளியை ஒட்டிய குஜராத்தின் தோலவீரவில் இன்றும் அதன் சான்றுகள் வைக்கப்பட்டுள்ளது. குஜராத்தை அடுத்த மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திரா என மலைப்பிரதேசங்களில் இன்றும் திராவிட பழங்குடியினர் வாழ்கின்றனர். அவர்கள் பேசுவது திராவிட மொழிக் குடும்பத்தின் தாய்மொழியான தமிழே.சிந்துசமவெளியை ஒட்டி குஜராத்தின் கட்ச் பிராந்தியமானது ஆதி தமிழர்களான நாகர்களின் தேசம் என்றே இன்றும் குஜராத்தில் வாழ்ந்த மக்களே வரலாற்றை எழுதி வைத்திருக்கின்றனர்.
ஆதி தமிழர்கள் இப்படி இந்திய பெருநிலப்பரப்பு எங்கும் வாழ்ந்தனர்.அரசியல் சாசனத்தை வடிவமைத்த அண்ணல் அம்பேத்கரும், வடபுலத்து நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழை கைவிட்டு சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொண்டனர்; தென்புலத்து நாகர்கள் தாய்மொழியான தமிழை அப்படியே தக்க வைத்துக் கொண்டனர் என்கிறார்.
தற்போது மதுரைக்கு அருகே கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வு மூலம் கிடைத்த முடிவுகள் மற்றும் கவிஞர் வைரமுத்து கூறுவதைப் போல, சிந்துவெளிக்கு முந்துவெளி எங்கள் கீழடி என்பதாக பறைசாற்றி நிற்கிறது. 6,000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் கல்வியில் சிறந்தவர்களாக, வாழ்வியல் கட்டமைப்பு முறைகளில் உயர்வான நாகரிகத்துடன் வாழ்ந்தவர்கள் என்பதை கீழடி முடிவுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.சிந்துசமவெளியில் கிடைத்த சான்றுகள் அதன் தொடர்ச்சியாக அப்படியே வைகை சமவெளியிலும் சான்றுகள் கிடைத்திருக்கிறது. இதனால்தான் தமிழர்கள் இந்தியாவில் பெருநிலப்பரப்புக்கு சொந்தக்காரர்கள் என்கிற பெருமிதம் கொள்கிறார்கள்.