நடிகர் ஆரி அர்ஜுனனுக்கு தற்போது மீண்டும் குழந்தை பிறந்து இருக்கும் செய்தியை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறார். ஆரிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 2005 ஆம் ஆண்டு வெளியான “ஆடும் கூத்து” என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகர் ஆரி. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிறந்து வளர்ந்த, இவர் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்தார். பின்னர் 2019 வெளியான ரெட்டச் சுழி திரைப்படம் இவருக்கு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

அதன் பின்னர் இவர் மாலைப் பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, தரணி, மாயா, முப்பரிமாணம், எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துப்பான் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் நெடுஞ்சாலை திரைப்படத்திற்குப் பிறகு ஆரி நடித்த எந்த திரைப்படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எனவே இவர் தனக்கு ஒரு வெளிச்சம் வேண்டும் என்பதற்காக பிக்பாஸில் கலந்து கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 4-ல் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.
இந்த சீசனில் ஆரி அணி, பாலாஜி அணியினர் ரசிகர்கள் இரண்டு தரப்பாக பிரிந்து கொண்டு மோதிக் கொண்டிருந்தனர். ஆரிக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் ஆதரவு இருந்த நிலையில், அவரை எதிர்த்த பாலாஜிக்கு மற்றொருபுறம் ஆதரவு இருந்து வந்தது. மிக விறுவிறுப்பாக செல்லாத இந்த சீசன் ஆரி மற்றும் பாலாஜி சண்டையாகவே இறுதிவரை தொடர்ந்தது. இதனால் பிக்பாஸ் மீது பலருக்கும் ஏமாற்றம் மிஞ்சியிருந்தது. இந்த நிலையில் இறுதியில் நடிகர் ஆரி வெற்றி பெற்று அந்த சீசனின் டைட்டிலையும் வென்றிருந்தார்.
தற்போது கைவசம் அலேக்கா, பகவான், டிஎன் 43, மேன் போன்ற நான்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் ஆரி தற்போது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றைப் போட்டு இருக்கிறார். அதில் தனக்கு மகன் பிறந்திருக்கும் செய்தியை அறிவித்திருக்கிறார். ஏற்கனவே அவருக்கும் நதியா என்கிற இலங்கைப் பெண்ணுக்கும் 2015 ஆம் ஆண்டு திருமணமாகி ரியா என்கிற பெண் குழந்தை இருக்கிறது.
ரியா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பொழுது உணர்ச்சிகரமான நிகழ்வு நடந்தது. அவரும் ஆரிக்கும் இடையே இருந்த பாசமும், ரியா தந்தையை எதிர்க்கும் பாலாஜி முருகதாஸிடம் சென்று பேசிய விதமும் பார்ப்பவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த எபிசோட் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னிலை பெற்று இருந்தது.
இந்த நிலையில் மீண்டும் தற்போது ஆரி தந்தையாகி இருக்கும் விஷயத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அதில் அவர், “ஒன்பது மாத காத்திருப்புக்குப் பின்னர் இறுதியாக நான் மிகவும் ரிலாக்ஸாக உணர்கிறேன். மேலும் நான் ஒரு இளவரசனின் அப்பாவானதற்காக பெருமை கொள்கிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவிற்கு கீழே பாலாஜி முருகதாஸ் “வாழ்த்துக்கள் பார்ட்னர்” என்று பதிவிட்டு இருக்கிறார்..! பலரும் ஆரிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..!