
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அசுரன் படம் மூலம் காலடி எடுத்து வைத்தார் மஞ்சு வாரியர். இவர் சதுர்முகம் என்ற மலையாள படத்தில் தற்போது நடித்து வருகிறார். இது மலையாளத்தில் திகில் படமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியருக்கு தொழில் அதிபர் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அங்கு மஞ்சுவாரியர் வில்லன்களுடன் சண்டையிடும் காட்சிகள் படமாக எடுக்கப்பட்டது. சற்று கடினமாக இருக்கும் சண்டை காட்சிகள் என்பதால் அவருக்கு பதிலாக டூப் நடிகையை பயன்படுத்தலாம் என்று ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஆலோசனை வழங்கினார்.
அந்த யோசனையில் உடன்பாடு இல்லாத மஞ்சுவாரியர் தானே சண்டை காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பாதுகாப்புக்கு கயிறு கட்டி இருந்தனர். அதையும் மீறி மேலே இருந்து கீழே குதித்தபோது மஞ்சுவாரியருக்கு பலத்த அடி ஏற்பட்டது. காலிலும் இடுப்பு பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டன. வலியால் துடித்தார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. வரும் 12-ஆம் தேதி மஞ்சுவாரியர் நடன நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதாக இருந்தது. அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு மஞ்சுவாரியர் எழுதி உள்ள கடிதத்தில் டாக்டர்கள் எனது காலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்து உள்ளதால் என்னால் கலந்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். இதனால் நடன நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர்.