நடிகை அதிதியால் சூப்பர் சிங்கர் பிரபலம் ஒருவருக்கு பாடும் வாய்ப்பு கைவிட்டுப் போய் உள்ள தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் சங்கரின் இளைய மகள் அதிதி. இவர் தொழில் ரீதியாக மருத்துவம் படித்திருந்த போதிலும், நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் நடிப்புத் துறைக்கு வந்தார். முதல் படமே சூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் கமிட்டானார். இந்த படத்தில் தேன்மொழி என்கிற கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணியில் தோன்றினார். பாவாடை தாவணியில் அவர் செம க்யூட்டாக ஆடியதால் அவருக்கு ஒரு பாடலிலேயே ரசிகர் பட்டாளம் பெருகியது. இதனால் அவருக்கு தொடர்ந்து படங்களின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படமான மாவீரன் படத்தில் ஹீரோயினாக நடித்த ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகை அதிதி. மேலும் இது மட்டுமில்லாமல் செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலிலும் இவர் பங்கேற்று நடனமாடி இருக்கிறார்.

மேலும் விருமன் படத்தில் அதிதி யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து மதுரவீரன் என்ற பாடலையும் பாடியிருக்கிறார். இது போல் அவர் குறுகிய காலத்திலேயே தொடர்ந்து வளர்ந்து வருவதால் அவர் மீது பல விமர்சனங்களும் எழுந்து வருகிறது. மீசைய முறுக்கு படத்தில் நடித்த ஹீரோயின் ஆத்மிகா கூட இவரைக் குறிக்கும் விதமாக, “சிலருக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடுகிறது, ஏணியில் ஏறி மேலே வந்து விடுகிறார்கள் என்று மறைமுகமாக விமர்சித்து இருந்தார். ஆத்மிகா அதிதியைத்தான் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். சங்கரின் மகள் என்பதாலேயே இவ்வளவு சலுகை காட்டப்படுகிறது என்று பலரும் தங்களது ஆதங்கங்களை கொட்டி வருகின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விக்னேஷ் சிவனிடம் இது குறித்து கேட்டபோது ஒரு தமிழ் முகம் வேண்டும் என்பதற்காகவே சங்கரின் மகளை தேர்வு செய்து ஒலிம்பியாட் வரவேற்பு பாடலில் ஆட வைத்ததாக விளக்கம் அளித்து இருந்தார். ஆனாலும் அந்த விளக்கம் பலருக்கும் ஏற்புடையதாக இல்லை.
தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு கருத்து உலா வந்து கொண்டிருக்கிறது. அதில் சூப்பர் சிங்கரை சேர்ந்த ராஜலட்சுமி விருமன் படத்தில் மதுரவீரன் படத்தை பாடுவதற்கு ஒப்பந்தமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பாட்டை அதிதியே பாடியதால் ராஜலட்சுமிக்கு இந்த வாய்ப்பு கைவிட்டு போனதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் சிலரோ இந்த பாடலை ராஜலக்ஷ்மி பாடி முடித்து விட்டார், பின்னர் அவர் பாடியதை நீக்கி விட்டு அதிதியை பாட வைத்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். இதை சிலர் மேற்கோள்காட்டி ஆத்மிகா சொன்னது சரிதானோ என்றும், அதிதிக்கு எல்லாம் எளிதாக கிடைக்கிறதே என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.