Categories: சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷின் “டிரைவர் ஜமுனா” படம் எப்படி இருக்கிறது? முழு திரை விமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5)

வெளியிட்டது

இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் டிரைவர் ஜமுனா. பெண் கார் டிரைவர் ஆக கால் டாக்ஸி ஓட்டி வரும் ஒரு பெண் படும் இன்னல்கள் குறித்த கதை தான் டிரைவர் ஜமுனா. இந்த படத்தை வத்திக்குச்சி படத்தை இயக்கிய இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கியிருக்கிறார். சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு நல்ல படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கிங்ஸ்லின். இந்த படத்தை 18 ரீல்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது. கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கிரைம் தில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படம் மிகவும் நன்றாக இருப்பதாகவே கூறினர். தற்போது இந்த படம் குறித்த முழு விமர்சனத்தை இந்த பதிவில் காணலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷின் "டிரைவர் ஜமுனா" படம் எப்படி இருக்கிறது? முழு திரை விமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 1
ஒரு சாதாரண கால் டாக்ஸி ஓட்டுனராக இருக்கும் ஒருவருக்குப் பிறந்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தந்தை இறந்த பிறகு அவரது பணியை தன் கையில் எடுத்துக் கொண்டு கால் டாக்ஸி ஓட்டி அதில் பிழைப்பு நடத்தி வருகிறார். வீட்டை அடமானம் வைத்துவிட்டு அவரது தம்பி ஓடிவிட, நோய்வாய்ப்பட்ட அம்மாவுடன் போராட்டமான வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். வேறு வருமானமே இல்லாத சூழ்நிலையில் கால் டாக்ஸியை மட்டுமே நம்பி தனது குடும்பத்தை நடத்தி வருகிறார் ஐஸ்வர்யா. இந்த நிலையில் அரசியல்வாதி ஒருவரை கொலை செய்ய ஒரு கூலிப்படை கிளம்புகிறது. அந்த கூலிப்படை ஐஸ்வர்யாவின் கால் டாக்ஸியில் ஏறி விடுகின்றனர். அந்த கால் டாக்ஸியை பின்னாலே துரத்தி வருகிறது போலீஸ். இவர்களிடமிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தப்பித்தாரா? கூலிப்படையின் திட்டம் நிறைவேறியதா ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை எப்படி இறந்தார்? அதற்கான காரணம் என்ன என்பதற்கான ட்விஸ்ட்டுடன் அமைந்த ஒரு கதை தான் டிரைவர் ஜமுனா.

பக்கவாதத்தால் வீட்டிலேயே முடங்கிய தாய், தந்தையின் திடீர் இழப்பு, வீட்டை அடமானம் வைத்துவிட்டு வீட்டை விட்டு ஓடிய தம்பி என குடும்பமே இருட்டில் முடங்கியது போல் இருக்கும் நிலையில், தனி ஆளாக இருந்து குடும்ப பாரத்தை சுமந்து வருகிறார் ஐஸ்வர்யா. இந்த கதாபாத்திரத்தில் அவர் தனது நேர்த்தியான தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எப்போதும் முகத்தில் ஒரு இறுக்கமும், அனைத்து சூழ்நிலைகளிலும் மாறாமல் இருப்பது என்று தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார். திருப்பங்கள் நிறைந்த காட்சிகளில் அவரது நடிப்பு கைத்தட்டல்களை பெறுகிறது. மேலும் எம்எல்ஏவாக வரும் ஆடுகளம் நரேன், ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி கதாபாத்திரம், அம்மாவாக வரும் ஸ்ரீரஞ்சனி, மேலும் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனான பிக்பாஸ் மணிகண்டன் ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர். காமெடி என்கிற பெயரில் ஜமுனா காரில் பயணிக்கும் யூடியூப் பிரபலம் அபிஷேக்கின் காமெடிகள் சிறிது எரிச்சலை ஏற்படுத்துகின்றது.

கூலிப்படைகள் செய்யும் சதி வேலைகள் கோபத்தை வரவழைப்பதற்கு மாறாக சிரிப்பை தான் வரவழைக்கின்றது அவர்கள் மேல் கோபமும் பயமும் வரவில்லை. இவ்வளவு அஜாக்கிரதையாக இருக்கும் கோமாளிகள் போன்ற ஆட்கள் எப்படி கொலை செய்கிறார்கள்? போலீஸ் இவ்வளவு கஷ்டப்படும் தேடும் அளவிற்கு இவர்கள் மோசமானவர்களா என்கிற ஆச்சரியமே நமக்கு ஏற்படுகிறது. வாலாஜாபாத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு டாக்ஸியில் தப்பிச்செல்லும் கூலிப்படையை பிடிக்க போலீஸ் திணறுவது ஏற்புடையதாக இல்லை. உயிர் பயத்தில் இருக்கும் எம்எல்ஏ போலீசின் உதவியை நாடாமல் அவர் ஒரு பக்கம் தனியாக முழித்துக் கொண்டிருக்கிறார். இந்த காட்சிகள் அனைத்தின் முடிவிலும் குழப்பங்களும் கேள்விகளுமே நிறைந்து இருக்கின்றன. கிளைமாக்ஸ் காட்சிகள் வரை, அனைத்துமே எளிதில் யூகிக்கும்படியாக பல காட்சிகள் அமைந்திருக்கிறது. இடை இடையே சில தேவை இல்லாத காட்சிகளும் நீண்டு கொண்டிருக்கின்றன. கிளைமாக்ஸில் ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்லும் கதை நம்மை இருக்கையின் நுனியில் அமர வைக்கிறது. அவர் மீது பரிதாபமும் ஏற்படுகிறது.

டைட்டில் தொடங்கி கிளைமாக்ஸ் வரை பின்னணி இசையில் தன்னால் முடிந்தவற்றை காட்டி இருக்கிறார் ஜிப்ரான். பாடல்கள் எதுவும் இல்லாமல் பின்னணி இசையை மட்டுமே வைத்து படம் நகர்ந்து கொண்டிருக்கிறது. சேசிங் காட்சிகளும், காருக்குள் நடக்கும் காட்சிகளையும் ஒளிப்பதிவாளர் கோகுல் மிக அழகாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். தேவையில்லாத பாடல் காட்சிகள், அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் காதல் காட்சிகள் இது எதுவுமே இல்லாமல் ஒரே நேர்கோட்டில் செல்லும் கதையாக டிரைவர் ஜமுனா அமைந்திருக்கிறது. சில இடங்களில் தேவையில்லாத ஸ்பீடு பிரேக்குகளை தவிர்த்து இருந்தால் டிரைவர் ஜமுனாவின் பயணம் இன்னும் சிறப்பானதாக அமைந்திருக்கும். இந்த படத்திற்கு தமிழ்கிளிட்ஸ் வழங்கும் ரேட்டிங். 3.5/5

Youtube Video Code Embed Credits: Think Music India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்