ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் ‘லால் சலாம்’. இந்தப் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா போன்ற பலர் நடித்திருந்தனர். சூப்பர் ஸ்டாரும் கேமியோ ரோலில் ‘மொய்தீன் பாய்’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை கூறிவரும் நிலையில், திருச்சியில் இருக்கும் ரஜினி ரசிகர்கள் செய்திருக்கும் காரியம் தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட துணைச் செயலாளர் ராயல் ராஜு ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்காக வடிவமைத்திருக்கும் அந்த கொடி தான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் உருவம் பொறிக்கப்பட்ட அந்த கொடியில், “சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்” என்கிற வாசகம் இடம் பெற்றிருந்தது. ‘லால் சலாம்’ வெளியான தியேட்டர் முன்பாக அந்த கொடியை ஏந்தி நூற்றுக்கணக்கான ரசிகர்கள் பலரும் வலம் வந்தனர். சிவப்பு, மஞ்சள், பச்சை என பல வண்ணங்களுடன் அந்த கொடி இருந்ததால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கட்சி தொடங்க முன்னோட்டமோ? என்று பரபரப்பு பற்றிக் கொண்டது.
பின்னர் அந்த கொடியை வடிவமைத்த ராயல் ராஜு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர், “எங்கள் தலைவரின் மகள் இயக்கிய படம் என்பதால், வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இந்த கொடியை வடிவமைத்தேன். “இந்தப் படத்தில் புரட்சிகரமான கருத்தை ஐஸ்வர்யா எடுக்க முன் வந்ததால் சிவப்பு நிறத்தை கொடியில் சேர்த்தேன். அதேபோல தலைவர் சொல்லை நிறைவேற்ற எப்போதும் தயார் நிலையில் இருப்பதால் மஞ்சள் நிறத்தையும், ஐஸ்வர்யாவை வாழ்த்தும் விதமாக வெற்றி குறியீடாக பச்சை வண்ணத்தையும் கொடியில் சேர்த்து இருக்கிறோம்.
எல்லா புரட்சிகளுமே விரும்புவது அமைதியையும், சமாதானத்தையும் தான். அதனாலே தான் கொடியில் “சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்” என்ற வாசகத்தை பொறித்தோம் தலைவர் படத்தை கொண்டாடி, இந்த படத்தை இயக்கிய அவரது மகளுக்கு சிறப்பு செய்யத்தான் இந்த கொடியை வடிவமைத்தோம். இதன் பின்னணியில் எந்த அரசியல் முயற்சியோ அரசியல் நோக்கமோ இல்லை” என்று விளக்கமளித்தார்.