பிக்பாஸ் போட்டியாளரான விக்ரமனுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் நிலையில், விக்கிரமனுடன் பிக்பாஸில் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் அசீமின் தாய் மாமாவும், நாகைப்பட்டினம் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ஆளூர் ஷாநவாஸ் விக்ரமனுக்கு ஆதரவளித்திருக்கிறார். அவர் தனது மருமகன் அசீமுக்கு ஆதரவு தராமல் விக்ரமனுக்கு ஆதரவு கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. 103 நாட்களை நிறைவடைந்து இன்னும் இரண்டு நாட்களில் இறுதிக்கட்டம் வர இருக்கிறது பிக்பாஸ். இந்த நிலையில் இதில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக எழுந்திருக்கிறது. அதில் விக்ரமன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆதரவு கொடுத்திருந்தார்.

தம்பி விக்ரமனுக்கு ஹாட்ஸ்டாரில் சென்று வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இது சர்ச்சையை கிளப்பியிருந்தது. பிக்பாஸில் கலந்து கொண்ட முன்னாள் போட்டியாளரான வனிதா இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். ஒரு அரசியல் கட்சியின் தலைவர் ரியாலிட்டி ஷோவில் செல்வாக்கு செலுத்துவது சரி இல்லை என்ற ரீதியில் அவர் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து விக்ரமனுக்கு மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி மற்றும் பிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளர் ரித்திகா போன்ற பலர் ஆதரவு கொடுக்கத் தொடங்கியுள்ளனர். பலரும் அறம் வெல்லும் என்ற ஹேஷ்டேக்குடன் விக்ரமனுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது விக்ரமனுக்கு ஆதரவாத அசீமின் தாய் மாமா ஆளூர் ஷாநவாஸ் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் விக்ரமனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கையில் கிடைக்கும் ஒவ்வொன்றையும் கருவிகள் ஆக்குவோம். கடைசி மனிதனின் விடுதலைக்காக களத்தில் ஆடுவோம் என்று தலைவர் திருமாவின் வரிகளுக்கு ஏற்ப கிடைத்த வாய்ப்பில் கொள்கை உறுதியுடன் வெளிப்பட்ட தோழர் விக்ரமன் வெல்க என்றே பதிவிட்டிருக்கிறார். அசீமின் சொந்த தாய் மாமாவே அவருக்கு ஆதரவளிக்காமல் விக்ரமனுக்கு ஆதரவளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல சீசன் 2 வின் வெற்றியாளரான ரித்திகா அறம் வெல்லும் என்ற ஹேஷ்டேக்கை பகிர்ந்திருக்கிறார். மேலும் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் கூட தனக்கு கிடைத்த வாய்ப்பில் சாதியம், சமூக அநீதிகள் குறித்தும், தமிழ்நாடு குறித்தும் பதிவு செய்த விக்ரமன் வாழ்த்துக்குரியவர் என்று அவரை பாராட்டி பதிவிட்டு இருக்கிறார். இவ்வாறு தொடர்ந்து விக்ரமனுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர்களின் ஆதரவு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது..!