பிரபல இசையமைப்பாளரான அனிருத்தின் தாத்தா மறைந்துள்ள செய்தி தற்போது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத் இவர் இளம் வயதிலேயே மிக பிரபலமான பாடல்களை இசையமைத்து, குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளராக மாறியவர். இன்று அனிருத்தின் தாத்தா எஸ் வி ரமணன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். ஊடகத்துறையில் வானொலியில் விளம்பரங்கள் மூலமாக பிரபலமானவர் எஸ் வி ரமணன். தமிழ் திரைப்பட உலகின் தந்தை, தயாரிப்பாளர், நடிகர் என பன்மையாக திறமையாளராக வலம் வந்தவர் இயக்குனர் கே சுப்பிரமணியம். அவருடைய மகனும் வானொலி விளம்பரங்களில் குரல் கொடுத்து பிரபலமானவர் தான் எஸ் வி ரமணன்.

இவருடைய குரலுக்கு பல ரசிகர்கள் உண்டு. பல ஆண்டுகளாக வானொலியில் கோலொச்சி வந்தவர். ரத்னா ஃபேன் ஹவுஸ் விளம்பரத்தில் ஒலிக்கும் இவருடைய குரலை இன்றளவும் யாராலும் மறந்திருக்க முடியாது. மக்கள் தொடர்பு கலையில் இவர் செய்த சாதனைக்காக இவருக்கு டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ஒரு முறை நேர்காணலும் செய்திருக்கிறார். இந்த நிலையில் அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆர் ஏ புரத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு லட்சுமி, சரஸ்வதி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் லட்சுமியின் மகன் தான் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ் வி ரமணன் நாடக கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார். மேலும் தூர்தர்ஷன்க்காக பல தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியிருக்கிறார். வானொலியில் இவர் குரலில் ஒலித்த விளம்பரங்கள் இன்று வரை பிரபலமாக இருக்கின்றன. கலைத்துறையில் இத்தனை ஆண்டுகளாக பணியாற்றி வந்த அந்த மாபெரும் கலைஞருக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Youtube Video Code Embed Credits: Cine Samugam