திருத்தப்பட்ட குடியுரிமைத் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்துபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கூறியுள்ளார்.

கடந்த மாதம் குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மதம் அடிப்படையில் குடியுரிமை என்ற புதிய திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரத்தில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் நிதானமாக காய்களை நகர்த்தி வருவதாக தெரிகிறது. பேட்டி மட்டுமே கொடுத்து வந்த காங்கிரஸ், பேரணி நடத்தியது. பின்னர் புதிய சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது. மேலும் மிக தாமதமாக எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கூட்டியது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்துக்கு எதிராக மாநிலங்கள் செயல்பட முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபல் தெரிவித்திருந்தார்.
தற்போது இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மற்றோரு தலைவரான அகமத் படேல், பஞ்சாப் மாநிலத்தைப் பின்பற்றி ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
புதிய குடியுரிமை மசோதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெருமை கேரள மாநிலத்திற்கே சாரும். அதனை தொடர்ந்து தற்போது 2-ஆவது மாநிலமாக பஞ்சாபிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
“நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதன் மூலம் மத்திய அரசு இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது தெளிவாகும்” என அகமது பட்டேல் தெரிவித்துள்ளார்.