சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு அருண் விஜய் ட்வீட் ஒன்றை போட்டு இருக்கிறார். அந்த ட்வீட்டை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தற்போது குஷியில் இருக்கிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் அருண் விஜய்க்கும் சில வருடங்களாக சண்டை என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. அருண் விஜய் சிவகார்த்திகேயன் குறித்து போட்ட பழைய டிவீட் ஒன்றை வைத்துக்கொண்டு இருவருக்கும் சண்டை என்று இணையத்தில் வதந்திகள் கிளம்பி இருந்தது. சீமராஜா படம் வெளியான போது பலரும் மாஸ் ஹீரோ என்று சிவகார்த்திகேயனை புகழ்ந்து ட்வீட் போட, பதிலுக்கு “இவன் எல்லாம் மாஸ் ஹீரோவா? யார் யாரெல்லாம் மாஸ் பண்றது விவஸ்த்தை இல்லாமல் போச்சு, தமிழ் ஆடியன்ஸ்க்கு தெரியும், உண்மையான திறமைசாலிகளுக்கு மட்டுமே அவர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று அருண் விஜய் பதிவிட்டு இருந்தார்.

இது சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. அருண் விஜயை ட்விட்டர் பக்கத்தில் சென்று திட்டி தீர்த்திருந்தனர். அது குறித்து விளக்கமளித்த அருண் விஜய், அந்த பதிவை நான் போடவில்லை, தன்னுடைய ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கிறது என்று விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் யானை படம் வெளியான போது படத்தை வாழ்த்தி சிவகார்த்திகேயன் பதிவு ஒன்றைப் போட, அதற்கு பதில் அளித்து இருந்த அருண் விஜய் உங்களுடைய அன்புக்கு நன்றி சகோதரரே, உங்களுடைய வெற்றியை பார்த்து நான் மிகவும் சந்தோசப்படுகிறேன் என்று பதில் அளித்து ட்வீட் போட்டிருந்தார். இந்த நிலையில் யானை பட வெளியீடு போது இந்த சர்ச்சை குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “தனக்கும் சிவாவுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது, தேவையில்லாமல் எதையாவது கிளப்பி விடாதீர்கள், மீடியாக்கள் தான் இது போல் கிளப்பி விடுகின்றனர்” என்று காட்டமாக பதில் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது சர்ச்சைகள் அனைத்தும் ஓய்ந்து இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்கிற படத்தில் நடித்த முடித்திருக்கிறார். இந்த படம் வெளியாகி சுமார் நான்கு நாட்களில் 50 கோடி வசூலை பெற்றிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. ஆரம்பத்தில் படம் குறித்து பலரும் மோசமான விமர்சனங்களை கூறி வந்த நிலையில் தற்போது படம் ரசிகர்களை கவர்ந்திருப்பதாகவே தெரிகிறது. வேறு எந்த படமும் பெரிய அளவில் வெளியாகாத காரணத்தினால் மாவீரன் படம் தற்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பல பிரபலங்களும் இந்த படத்தைப் பார்த்து விட்டு வாழ்த்துக்களை கூறிவரும் நிலையில் தற்போது அருண் விஜயும் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.
அதில் தற்போது தான் மாவீரன் படத்தை பார்த்தேன், இந்த படத்தை முழுமையாக ரசித்தேன், சிவகார்த்திகேயன் சகோதரரே நீங்கள் இந்த ரோலை மிகவும் அழகாக எளிமையாக நடித்திருக்கிறீர்கள். உங்கள் கேரக்டரை உணர்ந்து நீங்கள் நடித்திருக்கிறீர்கள். யோகி பாபு மற்றும் விஜய் சேதுபதியின் அசரீரி குரலையும் விரும்பிப் பார்த்தேன். இயக்குனர் மடோன் அஸ்வின் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் அருண் விஜய். பழைய கசப்புகளை மறந்து அருண் விஜய் தற்போது சிவகார்த்திகேயனை பாராட்டி இருக்கும் விஷயத்தை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்..!