தேசிய குடியுரிமை மசோதா நிறைவேறி இருக்கும் நிலையில், நாம் அது குறித்தான விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதே வேளையில், மோடி-அமித்ஷா கூட்டணியின் அடுத்த இலக்கு நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நீங்கள் இந்துவோ அல்லது முஸ்லீமோ, ஆனால் எல்லோருக்கும் அடி கொடுக்கும் வகையில் ஒரு மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது. தகவல் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் வெளிவந்திருக்கும் கொடுவுரமான சட்டத்தால் அனைவரின் தகவல்களும் உச்சகட்ட பாதுகாப்பின்மையில் இருக்கிறது.

இந்த மசோதா சட்டமாக உருமாறினால், “எந்தந்த விசாரணை அமைப்பு இந்த சட்டத்தின் கீழ் வரும் மற்றும் எந்த அமைப்பை இதிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை அரசாங்கம் தான் முடிவு செய்யும். அந்த முடிவும் நிரந்தரமானது கிடையாது.அவர்கள் நினைக்கும் போதெல்லாம் இந்த வரைமுறையை சட்டமின்றி மாற்ற முடியும்”. இதில் நாடாளுமன்றத்தின் பொறுப்புகள் ஏதும் இல்லாததே மிக பெரிய அச்சுறுத்தல்களை நாம் சந்திக்க போகிறோம் என்பதை நினைவுபடுத்துகிறது.
இந்த மசோதாவை வரையறை செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ணா தலைமையில் கமிட்டி நியமிக்கப்பட்டது. சட்டப்படியும், நீதிமன்றத்தின் கண்காணிப்புக்கு கீழ் மட்டுமே தனி நபரின் தகவல்களை அரசாங்கத்தால் கையாள வேண்டும் என இந்த கமிட்டி கூறியுள்ளது. இந்த மசோதா தொடர்பாக உச்சநீதி மன்றம் புதிய வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. இதனை உள்ளடக்கி இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை மக்களவாயில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தாக்கல் செய்தார். ஆனால் இம்மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்புமாறு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் கூட்டு குழுவிற்கு இந்த மசோதா விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்றங் தகவல் தொழில்நுட்ப நிலைக்குழுவின் தலைவராக காங்கிரசின் சசி தரூர் இருக்கிறார். இதன் காரணமாகவே நிலைக்குழுவிற்கு பதிலாக கூட்டுக்குழுவிற்கு மசோதா அனுப்பப்பட்டுள்ளது.
தனிநபரின் தகவல்களை அரசாங்கம் சேகரிக்கும் போது, தனியார் நிறுவனங்களுக்கு இதன் மசோதா மூலம் தடை ஏற்படுகிறது. ஆனால் அரசாங்கமே கட்டுப்பாடற்று செயல்பட கூடியது என்பதை மறந்துவிட கூடாது.
இதனை எல்லாம் விட தற்போது மிகப்பெரிய கேள்வி நம்முன் நிற்கிறது. இந்த மசோதாவால் உங்கள் தகவல்கள் சேகரிக்கப்படும் போது, அரசியல் ரீதியாக இதனை தவறாக பயன்படுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? இது குறித்தான கேள்விக்கு ஏன் அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை?