தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று தான் கூறவே இல்லை என்று சொல்லி தற்போது ‘லால் சலாம்’ படத்தின் கதாநாயகி தன்யா பாலகிருஷ்ணன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ‘லால் சலாம்’ படத்தின் கதாநாயகியாக இருப்பவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். இவர் ‘காதலில் சொதப்புவது எப்படி?’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’ போன்ற பல படங்களில் நடித்தார். சில வருடங்களுக்கு முன்பு சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இவர் போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதில் அவர், “டியர் சென்னை, நீங்கள் எங்களிடம் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறீர்கள், நாங்கள் தருகிறோம். மின்சாரத்துக்கு பிச்சை எடுக்கிறீர்கள், அதையும் நாங்கள் தருகிறோம்.

சென்னையில் இருந்து கிளம்பி பெங்களூருக்கு வந்து எங்கள் அழகிய நகரத்தை கொச்சைப்படுத்தி விட்டீர்கள். அதையும் நாங்கள் அனுமதித்தோம். ஆனால் இப்போது அதை எல்லாம் மறந்து விட்டீர்கள். நீங்கள் பிச்சை எடுத்து, நாங்கள் கொடுப்பதை போல இதையும் அனுமதிக்கிறோம்” என்று பதிவிட்டு இருந்தார். அந்த பதிவு இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் ‘லால் சலாம்’ படத்தில் கதாநாயகியாக தன்யா பாலகிருஷ்ணனை நடிக்க வைத்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் தனது twitter பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். அவரின் இந்த ட்வீட் வைரலான நிலையில், தற்போது தன்யா அது குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார்.
அதில் அவர், “நான் என் தொழில் செய்யும் தொழில் மேல் சத்தியம். சில நாட்களாக சமூக வலைதளங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக நான் கூறியதாக பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியது இல்லை. 12 வருடம் முன்பே இது நடந்த போது இதை நான் தெளிவுபடுத்த முயன்றேன். அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை. அந்த ஸ்கிரீன்ஷாட் ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. இதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க எவ்வளவோ முயன்றும் என்னால் முடியவில்லை. 12 வருடங்கள் நான் இது பற்றி பேசாமல் இருந்ததற்கான காரணம் அந்த சமயம் என் மீதும், என் குடும்பத்தின் மீதும் வந்த அச்சுறுத்தல்கள் தான் காரணம். அந்த கருத்து நான் கூறியதே இல்லை.
சர்ச்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும் துரவிஷ்டவசமாக என் பெயர் இதில் சம்பந்த படுத்தப்பட்டு விட்டது. இதனால் தமிழ் மக்களிடம் முழுதாக மன்னிப்பு கேட்கிறேன். என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடக்கும் செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த சர்ச்சையினால் திரு.ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் அவர்களின் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கும் எனது மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாமல் தவித்துக் கொண்டு, உங்கள் முன் இந்த கோரிக்கை வைக்கிறேன். என் தொழில் மீது சத்தியம் செய்து நான் கூறும் இந்த உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.