ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குண்டர்கள் தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஆகியோரின் தூண்டுதலே காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
ஜனவரி 5ஆம் தேதி முகமூடி அணித்த குண்டர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து இடதுசாரி மாணவர்களையும், பேராசிரியர்களையும் சரமாரியாக தாக்கினர். இத்தாக்குதலில் பலர் காயமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது நாடு முழுவது பலத்த அதிர்வலையை ஏற்படுத்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி மீது குற்றசாட்டு சுமத்தப்பட்டது. ஆனால் இந்து ரக்ஷா தளம் பொறுப்பேற்று உள்ளது.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “அதிகார பூர்வமாக குண்டர்கள் ஏவப்பட்டுள்ளனர்” என குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், “இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்று 72 மணி நேரம் கடந்து விட்டது. ஆனால் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த சம்பவம் ஏதோ தற்செயலாக நடைபெற்றுவிடவில்லை. நன்றாக திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுவரை எந்த ஒரு குண்டரும் கைது செய்யப்பட வில்லை.
காங்கிரஸ் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு நேரில் ஆய்வு நடத்தியதில், தற்போதை துணைவேந்தர் பல்கலைக்கழகத்தின் இயல்பு நிலைக்கு எதிரானவராக இருக்கிறார். எனவே அவர் பதவி விலக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.