தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிதாக 3 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு ஆளுநர் தொடக்க உரையாற்றி சட்டசபை கூட்ட தொடரை தொடங்கி வைத்தார். முதல் நாளே திமுக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தது. அதேபோல, ஆளுநர் உரையை கிழித்த திமுக உறுப்பினர் அன்பழகன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தினமும் ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களை இடைநீக்கம் செய்தல், மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்தும் குழுவின் தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிப்பு போன்றவற்றிக்கு தொடர்பாக மசோதாக்கள் அறிமுக படுத்தப்பட்டுள்ளன.
கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அல்லது துணைத்தலைவர் கையாடல், நம்பிக்கை மோசடி, தவறான நிர்வாகம், தவறான உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும்போது, அவரை தற்காலிகப் பதவி நீக்கம் செய்யும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் நேற்று அறிமுகம் செய்தார்.
ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்காக தமிழக அரசால் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் நிதி பயன்பாட்டைக் கண்காணிக்கவும், பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பதற்கான வல்லுநர் குழுவில் அரசு பிரதிநிதி ஒருவரை சேர்க்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு வேளாண் விளைபொருளை சந்தைப்படுத்துதல் சட்டத்தின்படி, புதிய சந்தைக்குழு அமைக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சந்தைக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவசரச் சட்டம் மூலம் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த அவசரச்சட்டம் தொடர்பான சட்டதிருத்த மசோதாவை சட்டப்பேரவையில் வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு நேற்று தாக்கல் செய்தார்.
இந்த மசோதாக்களுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தாலும், குரல் வாக்கெடுப்புகள் மூலம் நிறைவேற்றப்பட்டன.