தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். பிரபல நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் அவர் இயக்குனராக அறிமுகமாக இருப்பதை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது twitter பக்கத்தில் உறுதி செய்திருக்கிறது. மேலும். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் சுபாஷ்கரன் முன்னிலையில் அவர் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களை தற்போது அந்த நிறுவனம் அதிகராப்பூர்வமாக சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு இருக்கிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜயின் மகன் ஜேசன் விஜய் திரைத்துறையில் அடி எடுத்து வைப்பது எப்போது என்று ரசிகர்களிடையே ஆவல் இருந்தது. அதை பூர்த்தி செய்யும் விதமாக இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. சென்னையில் தனது பள்ளி படிப்பை முடித்த கையோடு மேற்படிப்புக்காக அமெரிக்க சென்றார் சஞ்சய். அங்கு சினிமா மேக்கிங் கிடைத்த படிப்பை தேர்வு செய்து படித்து வந்தார். மேலும் தனது கல்லூரி நண்பருடன் இணைந்து குறும் படங்களை இயக்கி அதை யூடியூபிலும் வெளியிட்டு வந்தார்.
சஞ்சய் விஜய்க்கு நடிப்பதில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை என்று கூறப்படுகிறது. சில பெரிய இயக்குனர்கள் விஜய்யை தேடி உங்கள் மகனை நடிக்க வையுங்கள் என்று அழைத்த போது கூட சஞ்சய் அதை வேண்டாம் என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. விஜய் கூட தன் மகனுக்கு விருப்பம் இருந்தால் அவரை நடிக்க வையுங்கள் என்று கூறியதாகவே தெரிகிறது. இந்த நிலையில் தனது முதல் படத்தை இயக்க லைகா ப்ரொடக்ஷன் நிறுவனத்துடன் சஞ்சய் இன்று ஒப்பந்தம் செய்திருக்கிறார். அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய சஞ்சய் தற்போது தனது முதல் படத்தை இயக்க இருக்கிறார்.
இதற்காக கதையை லைகா நிறுவனத்திடம் கூறிய போது, அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டதால் அவரை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் எது மாதிரியான படத்தை இயக்க இருக்கிறார்? யாரை வைத்து முதல் படத்தை இயக்க இருக்கிறார்? என்பது குறித்த ஆர்வம் தற்போது எழுந்திருக்கிறது. இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.