நேற்று தமிழகம் எங்கும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் கன்னடம் மொழி திரைப்படமான காந்தாரா திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஐ.எம்.டி.பி ரேட்டிங்கில் காந்தாரா திரைப்படம் இந்தியாவில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. ரிஷப் செட்டி, சப்தமி கவுடா, மானசி, கிஷோர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 30ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் காந்தாரா. இது கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகி இருக்க வேண்டிய இந்த படம், கன்னடத்தில் மட்டும் வெளியாகி இருந்தது சற்று ஏமாற்றத்தை அளித்ததால் மற்ற இந்திய மொழிகளிலும் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. இதன் அடிப்படையில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

கே ஜி எஃப் படத்தை தயாரித்த ஹோம்பலே ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. உலக அளவில் இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை பெற்றிருக்கிறது. ஐஎம்டிபி படங்களின் ரேட்டிங்கில் இந்த படம் முதலிடத்தை பெற்றுள்ளது. ரசிகர்கள் இந்த படத்திற்கு 9.5 ரேட்டிங் கொடுத்துள்ளனர். தமிழகத்தில் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. நேற்று தமிழின் டப்பிங் வெர்ஷன் தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தின் திரை விமர்சனம் குறித்து தற்போது பார்க்கலாம். காந்தாரா என்பதற்கு மாயவனம் என்று பொருள். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காடுகளில் நிம்மதி இல்லாமல் ஒரு அரசன் அலைந்து கொண்டிருக்கிறான், அவன் ஒரு பழங்குடியின மக்கள் வழிபடும் தெய்வத்தின் சிலையை பார்க்கிறான் அதன் பிறகு அவனுக்கு நிம்மதி கிடைக்கிறது.
அவன் அந்த சிலையை கொடுக்குமாறு அந்த மக்களிடம் வேண்டுகிறான். அப்போது அந்த கோவிலின் பூசாரி ஒருவர் சாமி வந்து கத்துகிறார். இந்த சத்தம் எந்த இடம் வரைக்கும் செல்கிறதோ, அந்த எல்லை வரை உள்ள நிலங்களை மக்களுக்கு கொடுத்தால், இந்த சிலையை கொடுப்பதாக பூசாரி உறுதியளிக்கிறார். இதனால் தனது நிலத்தின் பெரும் பகுதியை அந்த மக்களுக்கு அவன் எழுதிக் கொடுக்கின்றான். பின்னர் சில காலம் கழித்து வரும் மன்னனின் வம்சாவளியில் வந்த ஒருவர் அந்த மக்களிடமிருந்து அந்த நிலத்தை பிடுங்க நினைக்கிறார். அப்போது ஹீரோவின் அப்பாவுக்கு சாமி வந்து, இந்த நிலத்தை நீ திரும்ப பெற நினைக்கிறாயே, இதுவரை நான் கொடுத்த நிம்மதியை உன்னால் திருப்பிக் கொடுக்க முடியுமா என்று கேட்கிறார். மேலும் தானமாக வழங்கிய நிலத்தை கேட்கும் நீ இரத்தம் கக்கி சாவாய் என்று சாபம் விடுகிறார். அதேபோலவே நிலத்தை திருப்பி கேட்ட அரச வம்சாவளியினர் இறந்து போகிறார். அதன் பின்னர் அந்த நிலம் பழங்குடியின மக்களுக்கு சொந்தமாகிறது.
அதன் பிறகு 20 ஆண்டுகள் கழித்து 1990 என்று காட்டப்படுகிறது. இந்த பழங்குடியின மக்களை வன அதிகாரிகள் உதவியுடன் அரசு அங்கிருந்து விரட்டி அடிக்க நினைக்கிறது. ஆனால் அதை எதிர்த்து சாமியாடியின் மகன் ஹீரோ ரிஷப் ஷெட்டி எப்படி போராடுகிறார்? என்பது இந்த படத்தில் ஒட்டுமொத்த கதை. அவர் அந்த நிலத்தை அவர்களிடம் மீட்டரா? அந்த மக்களை எப்படி காத்தார் என்பது குறித்த கதை தான் படத்தின் மீதி கதை. கர்நாடகாவில் ஒரு சிறிய பழங்குடியின மக்களின் வாழ்க்கை கதை என, கதை எளிமையாக இருந்தாலும் இதன் திரைக்கதை வசனங்கள் என அனைத்துமே பல ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஒவ்வொரு நொடியும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பாசம், ரொமான்ஸ், காமெடி என அனைத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் இயக்குனர் ரிஷப் செட்டி. படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி.
ரிஷப் செட்டியும் அவரது தந்தையும் பூதகோல நடனமிட்டு ஆடும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தில் ரவிதாசன் ஆக நடித்திருந்த கிஷோர் இந்த படத்தில் வன அதிகாரியாக நடித்திருக்கிறார் .பழங்குடி மக்களை அந்த பகுதியில் இருந்து விரட்டி அடிக்க வரும் அவரின் கதாபாத்திரம் உண்மையிலேயே மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வெறும் 16 கோடி பட்ஜெட்டில் இப்படி ஒரு தரமான படத்தை கொடுக்க முடியும் என்று நிரூபித்து காட்டியிருக்கிறார் ரிசப் ஷெட்டி. பூத கோல வேடமிட்டு சாமி ஆடும் காட்சிகள் எல்லாம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. அதனுடன் இணைந்து ஓடும் பின்னணி இசை மனதிற்குள் பயத்தை உண்டு பண்ணுகிறது. இசையமைப்பாளர் அஜனீஸ் அமைத்துள்ள இசை இந்தப் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறது. ஆதி குடிகளின் வாழ்க்கையை அரசு ஆதாயத்திற்காக மாற்றும் உரிமையை மறுக்கும் வசனங்கள் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறது.
மேலும் சண்டைக் காட்சிகள் எல்லாம் தத்ரூபமாக இருந்தது. ஆங்காங்கே சில தொய்வுகள் இருந்த போதிலும் திரைக்கதை கதையின் வேகம், கதையின் நோக்கம், நகர்வு போன்றவைகளால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. நிச்சயமாக தியேட்டருக்கு சென்று இந்த படத்தை பார்க்கலாம். காந்தாரா படத்திற்கு தமிழ் க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் – 4.25/5
Youtube Video Code Embed Credits: Hombale films