இயக்குனர் கரு பழனியப்பன் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். சமூகநீதி, சுயமரியாதை, திராவிடம் போன்ற சொல்லாடல்கள் கசப்பா இருக்கும் என்றால் அந்த பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். பார்த்திபன் கனவு என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கரு பழனியப்பன். இந்தப் படத்திற்காக சிறந்த இயக்குனர் என்கிற மாநில அரசின் விருதையும் அவர் பெற்றிருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிவப்பதிகாரம் என்கிற படத்தை இயக்கினார். அதன் பின்னர் பிரிவோம் சந்திப்போம், மந்திரப்புன்னகை, சதுரங்கம் போன்ற படங்களை அவர் இயக்கியிருக்கிறார். தற்போது ஆண்டவர் என்கிற ஒரு படத்தையும் இயக்கி வருகிறார். இயக்குனராக மட்டுமில்லாமல் நட்பே துணை, டி ப்ளாக் போன்ற படங்களில் நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் கரு பழனியப்பன்.

இந்த நிலையில் அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சுமார் ஐந்து ஆண்டுகளாக ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா என்கிற விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நீயா நானா” நிகழ்ச்சியை காப்பியடித்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்ட வருவதாக ஒரு பக்கம் விமர்சனம் இருந்தபோதிலும், இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கத்தான் செய்கின்றன. மேலும் கரு பழனியப்பன் மீது சில விமர்சனங்களும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. கரு பழனியப்பனுக்கு பிடிக்காத எதிர் கருத்துக்கள் இருந்தால், அந்த கருத்துக்களை பேசுபவர்களை அதட்டி அடக்கி வைத்து விடுவார் என்ற விமர்சனம் இருந்து கொண்டே இருந்தது. கோபிநாத்தை பார்த்து எப்படி நிகழ்ச்சி நடத்துவது என்று கற்றுக் கொள்ளுங்கள் என்று காட்டமான விமர்சனங்களையும் நெட்டிசன்கள் முன்வைத்து வந்தனர். திராவிட கருத்தியல் பேசி வரும் கரு பழனியப்பன் திராவிட மேடைகளில் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த நிலையில் அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நிகழ்ச்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்திருக்கிறார்
இது ஜீ தமிழ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜீ தமிழ் உடனான நான்கு வருட தமிழா தமிழா பயணம் இனிதே முடிவுக்கு வந்தது. சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் அந்த பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது, நன்றி ஜீ தமிழ் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவிற்கு கீழே பலரும் கரு பழனியப்பனின் விலகலை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.!