(கீழ்வெண்மணி படுகொலையின் 51வது நாளை தொடர்ந்து சிறிய நினைவு கூறல்)
“இந்திய கிராமங்கள் மிகவும் புராதனமானவை. நிலம் சமூகத்தின் பொதுச் சொத்தாக இருக்கிறது. விவசாயமும், கைத்தொழில்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், வேலைப் பிரிவினைகள் மாற்ற முடியாத வகையில் கலாச்சார தர்மப்படி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் சமுதாய அமைப்பைப் புரிந்து கொள்ள கிராமத்தின் அமைப்பைப் புரிந்து கொள்வதுதான் முக்கியமானது” இக்கருத்து உலக சமூக பொருளாதார அரசியல் அறிஞர் கார்ல் மார்க்சின் கருத்து.
இச்சமூகம் நிலம் தொடர்புடையதாக இருக்கிறது. நிலம் மனித வர்க்கத்தை பிரித்து சாதிய முறையில் சமூக குழுக்களை தனியாக்கியுள்ளது. உழைப்பைக்கொண்டு மக்களை சாதியை உருவாக்கும் உத்திகள் இந்தியாவிலும் பார்ப்பனீயத்தின் காணப்படுகிறது. பெரும் நிலத்தை கொண்டவர்கள் நிலப்பிரபுக்கள் பண்ணையாள் முறை கட்டமைப்பில் தாழ்த்தப்பட்ட மக்களை அடிமையாக்கி, அவர்களின் உழைப்பை சுரண்டி வந்தது.
பார்ப்பனருக்கு அடுத்தபடியாக தங்களை உருவகப்படுத்திக்கொள்ளும் இடைநிலை சாதிகளின் உழைப்பு சுரண்டலுக்கு கீழ்வெண்மணி நல்லதொரு எடுத்துக்காட்டு. தங்களது நிலங்களில் செய்யும் வேலைகளுக்கு கூலியாக 1968-வரையிலும் ஒருபடி நெல்லையே கூலியாக கொடுத்தனர்.

மேலும் சவுக்கடி, சாட்டையடி, சாணிப்பால் போன்ற எண்ணற்ற கொடுமையான தண்டனைகளுக்கும் கூலி தொழிலாளர்கள் உட்படுத்தப்பட்டனர். இதன் விளைவாக திராவிடர் விவசாய தொழிலாளர்கள் சங்கம், கம்யூனிஸ்ட் போன்ற இயக்கங்கள் வீரியம் பெற ஆரம்பித்தன. அதே நேரத்தில் சுதந்திர போராட்ட களமும் சூடுபிடித்திருந்தது. கிராம நிர்வாக பதவிகள் சாதிய கட்டுப்பாட்டை உடைத்து கட்சிகள் பக்கம் திரும்பியது. ஆனால் அப்போதும் கூட பண்ணையார்கள் அரசியல்வாதிகளாக உருவானார்கள். இவ்வாறு ஊறி கிடந்த சாதிய வெறியின் கைகளுக்குள் அதிகாரம் கிடைத்தது.
மார்க்ஸும், பெரியாரும் ஒன்றிணைந்து வயல் வரப்புகளில் நடக்க தொடங்கிய காலமும் கூட. அதிகார திமிறில் கிடந்த பண்ணையார்களுக்கும், கம்யூனிஸ்டுக்ளுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. கூலி தொழிலார்களுக்கு ஆதரவாக தீவிரமான பிரச்சாரங்களை மேற்கொண்ட செங்கொடி படையில் ஏராளமான தொழிலாளர்கள் இணைந்துகொண்டனர். இந்த சம்பவமே பண்ணையார்களுக்கு எரிச்சலூட்டியது. பெரும் பகை உருவாவதற்கு காரணமே இவை தான். இப்பகை கணத்துக் கொண்டிருக்கும் போது தான் உழைப்புக்கு ஏற்ற கூலி வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பப்பட்டது. அரைப்படி நெல்லினை கூலி உயர்வாக கேட்டு போராட தொடங்கினர்.
கேட்டது கூலி உயர்வுதான், ஆனால் அதில் உரிமையும் – சுயமரியாதையும் முதன்மையானதாக மாற்றப் பட்டது. உழைக்கும் விவசாய வர்க்கத்தின் விடுதலை வெறும் கூலி உயர்வால் மட்டுமே வந்துவிடாது என்ற தெளிவும், நியாயமான கூலியில் சமரசமில்லை என்ற உறுதியும், அறுவடை செய்த எல்லா நெல்லையும் மூட்டை போடு, அத்தனை மூட்டைக்கும் கூலி கொடு என்ற உரிமையும், அந்தக் கூலியை நீ கொடுக்கும் நேரத்தில் உன் வீட்டுப் புழக்கடையில் நின்று வாங்கமாட்டேன். களத்து மேட்டிலேயே கணக்கை முடித்து விட்டுப்போ என்ற சுயமரியாதையும் சேர்ந்தே இருந்தது மட்டுமல்ல இப்படி கேட்டவர்களில் முன் வரிசையில் பெண்கள் இருந்தார்கள் என்பதும் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பதும் உண்மை.
25.12.68 மாலை 5 மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களை மிராசுதாரர் சவரிராஜ் நாயுடு வீட்டில் கட்டி வைத்து அடித்து தாக்க்கினர். இதனை கேள்விப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் திரண்டு அவர்களை மீட்டு சென்றனர். அதன் பின்பு மிராசுதாரர் கோபால கிருஷ்ண நாயுடு போன்றோர் ஆள் திரட்டி வெண்மணி கிராமத்துக்கு அடியாட்களுடன் சென்று தாக்கினர்.
அப்போது ஏற்பட்ட கைகலப்பில் பக்கிரி சாமி என்பவர் கொல்லப்பட்டார். ஆத்திரம் தாங்காத ஆதிக்க சாதியினர் கண்ணில் பட்ட அத்தனை தொழிலாளர்கள் மீதும் துப்பாக்கி சூட்டினை நடத்தினர். தங்களால் துப்பாக்கி தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது என்பதை உணர்ந்த விவாசாய தொழிலாளர்கள் ஓட ஆரம்பித்துள்ளனர்.
தப்பித்து ஓட முடியாத குழந்தைகள், பெண்கள், சில முதியவர்கள் கலவரம் நடந்த தெருவின் கடைசியாக இருந்த ராமைய்யா என்பவரின் குடிசைக்குள் பாதுகாப்புக்காக புகுந்தனர். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள சிறிய குடிசைக்குள் புகுத்தவர்களின் எண்ணிக்கையோ மொத்தம் 44. ஆத்திரம் அடங்காத கோபால கிருஷ்ண நாயுடு குடிசையின் கதவை பூட்டி தீ வைக்கும்படி அடியாட்களிடம் கட்டளை இட்டார். அதன்படி குடிசையின் கதவு அடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. குடிசைக்குள் இருந்த அத்தனை பெரும் உயிருடன் கொளுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். உலக நாடுகள் இந்தியாவில் வர்க்க வெறுப்பில் நடந்த படுகொலையைக் கண்டு உறைந்தே போனது.