பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் போல் இந்திய அணியை கோலி வழிநடத்துவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி தற்போது முடிந்துள்ள டி-20 கிரிட்கெட் தொடரை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் விராட் கோலியை பாராட்டியுள்ளார்.
அதில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை நினைவுபடுத்துகிறது. வலுவான தன்னம்பிக்கையுடன் இந்திய அணி உள்ளது. தோற்கும் நிலைமையிலிருந்தபோது வெவ்வேறு வழிகளைக் கண்டுபிடித்து இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
தன்னம்பிக்கை வலுவாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்று இந்திய அணியைப் பாராட்டியுள்ளார். இந்தத் தொடரின் மூலம் பேட்ஸ்மேன் கீப்பராக அருமையாகச் செயல்பட்ட கே.எல். ராகுலின் திறமையை இந்திய அணி கண்டுபிடித்துள்ளது. அபாரமாக அவர் விளையாடினார் என்றும் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.