
இன்று சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ந்தேதி என்று 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பாணை டிசம்பர் 6ந்தேதி வெளியிடவோம் என்றார். உள்ளாட்சி வாக்குபதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். உள்ளாட்சி தேர்தலுக்குக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந்தேதி நடைபெறும்.டிசம்பர் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல், 13ம் தேதி இறுதிநாள், மறைமுக தேர்தல் கூட்ட நாள்- 11.1.2020.
தேசிய தகவல் மையத்துடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.கிராம உள்ளாட்சி தேர்தல் வழக்கம்போல் வாக்குச்சீட்டு முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.முதற்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 2-ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 67 லட்சம் பேரும் வாக்களிக்க உள்ளனர்.
டிசம்பர் 27ம் தேதி முதற்கட்டமாக 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 6251 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 49638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும்.இரண்டாவது கட்டமாக டிசம்பர் 30ம் தேதி 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 6237 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 49686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறும்.
உள்ளாட்சி அமைப்புகளில் 1,18,974 பதவிகளை நிரப்பிட நேரடி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 658 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 388 ஊராட்சிக்கு உட்பட்ட 6886 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் நேரடி தேர்தல் நடைபெறும். வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும்.
கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கு நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படும். ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.
தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை ஒப்படைக்காவிட்டால் 3 ஆண்டுகள் போட்டியிட முடியாது. தேர்தல் பணிகளுக்காக 870 தேர்தல் அலுவலர்களும், 16,840 தேர்தல் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறினார்.