ஜம்மூ காஷ்மீர் மற்றும் லடாக் பிரதேசங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்து இருக்கிறது.
சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலதிற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, லடாக் மற்றும் ஜம்மூ காஷ்மீர் என இரண்டு பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்நிலையில், அம்மாநில ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் கோவா மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு கிரிஷ் சந்திரா முர்மு, லடாக் யூனியன் பிரதேசத்துக்கு ஆர்.கே.மாத்தூர் ஆகியோர் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரியான கிரிஷ் சந்திரா முர்மு, மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது, அவரின் முதன்மை செயலாளராக பணியாற்றியுள்ளார். இவர் பிரதமரின் நம்பிக்கைக்குரியவராக பார்க்கப்படுகிறார்.
இதே போல், ராதா கிருஷ்ணா மாத்தூர், நாட்டின் தலைமை தகவல் ஆணையராக (சிஐசி) பணியாற்றி, 2018 நவம்பரில் ஓய்வு பெற்றார். மேலும் இவர், இந்திய பாதுகாப்பு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன ஆணையம், திரிபுரா தலைமை செயலாளர், ஜவுளி அமைச்சகம் மற்றும் அதன் தலைமை அமலாக்க அதிகாரி என நீண்ட அனுபவத்தை கொண்டுள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள யூனியன் பிரதேசங்கள், வரும் 31ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். அன்றைய தேதியில் இப்புதிய ஆளுநர்கள் தங்களது பொறுப்பினை ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில சீரமைப்புகளுக்கு பிறகு ஜம்மூ காஷ்மீர் மீண்டும் மாநிலமாக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.